ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல், சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கப்படும், 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிறுத்தி வைப்பதாகவும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கடந்த ஏப்பிரல் 14ந் திகதி அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக 2017 இல் ஐ.நாவின் யுனெஸ்கோ (கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்தும், 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்தும் அமெரிக்கா வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, உலக நாடுகளில் ஏற்படும் நோய்த்தொற்று மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிப்பதற்காக தனி அமைப்பொன்றினை உருவாக்க முடிவு செய்த ஐக்கிய நாடுகள் சபை, 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 இல் உலக சுகாதார அமைப்பினை உருவாக்கியது.
முதலில் 61 நாடுகளை மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட உலக சுகாதார அமைப்பு, தற்போது 194 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளே உலக சுகாதார அமைப்பிற்கு நிதியுதவியினை வழங்குகின்றன. எனினும் வறிய நாடுகளால் அதிக தொகையை நிதியாக தர முடியாததால், வளர்ச்சியடைந்த நாடுகள் அதிகளவு பங்களிப்பினை வழங்கி வருகின்றன. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில் போன்ற நாடுகள்தான் தற்போதுவரை உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதியளிக்கும் நாடுகளாக இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், சில அரசு சார்பற்ற அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் உலக சுகாதார அமைப்பிற்கு நிதி வழங்குகின்றன. உலக சுகாதார அமைப்பு வெறுமனே ஆலோசனை கூறும் ஓர் அமைப்பு மட்டுமே. இதற்கு அதிகாரம் எதுவும் கிடையாது. உலக மக்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தலாம், நோய்த் தொற்றுகளை எப்படி தடுக்கலாம் என்று இந்த அமைப்பு பரிந்துரைகளை மட்டுமே செய்ய முடியும். அந்தப் பரிந்துரைகளை இந்த அமைப்பு உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலும் அமுல் செய்ய முடியாது.
உலக சுகாதார அமைப்பின் நிதியில் கிட்டத்தட்ட 15மூ அமெரிக்காவினது பங்களிப்பு. இந்த 15மூ இழப்பதென்பது அமைப்பை ஓரளவு பாதிக்கத்தான் செய்யும். உலகிலேயே மிக மோசமாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு அமெரிக்காதான். அமெரிக்காவில் இவ்வாறு தீவிரமாக கொரோனா பரவ சீனாதான் காரணம் என்று ட்ரம்ப் திரும்பத்திரும்ப தெரிவித்து வருகிறார். அதேபோல் உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று பற்றி உலகிற்கு போதிய எச்சரிக்கைகளை விடுக்கத் தவறியதாகவும் சீனா சார்பாக நடந்து கொள்வதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் ட்ரம்ப் தன்னுடைய சொந்தத் தவறுகளை மறைக்கவே இப்படி செய்கிறார் என்ற விமர்சனங்களும் அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவிற்கு எதிரான அவரின் தோல்வியை சமாளிக்கவே ட்ரம்ப் இப்படி பழிகளை பிறர் மீது போடுகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையே. இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கு வலுவூட்டும் விதமாக தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் அமெரிக்காவிற்கு வரும் முன்பே, அது தொடர்பாக 12 முறை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சி.ஐ.ஏ எச்சரிக்கை விடுத்துள்ளதாம். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் இறுதியிலேயே கொரோனா தொடர்பான முதல் எச்சரிக்கையை சி.ஐ.ஏ ட்ரம்பிற்கு அனுப்பி உள்ளது. ஆனால் அவர் இதன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பெப்ரவரி இறுதி வரை இந்த கொரோனா குறித்து ட்ரம்ப் எதுவும் அலட்டிக் கொள்ளவே இல்லை. இக்காலகட்டத்திலேயே அதன் பின்னர் எழுந்த பதட்ட நிலைமைகளைச் சமாளிப்பதிலும் இந்தியாவிற்கான விஜயத்திலும் அவரது முழுக்கவனமும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. உலகளவில் புகழ்பெற்ற தி லேன்செட் (Tube LANCET) எனும் மருத்துவ இதழின் பிரதம ஆசிரியர் ரிட்சார்ட் ஹோர்டன் (Richard Orton) அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியொன்றில், ‘இந்த நோய் தொற்றைச் சமாளிப்பதில் சீனாவின் பல நடவடிக்கைகள் உலகம் கற்றுக் கொள்ளத்தக்கவை. எடுத்துக்காட்டாக, தற்காலிக மருத்துவமனை, சீனாவின் வெற்றிகரமான நடவடிக்கைகளில் முக்கியத்துவம் மற்றும் புதுமை வாய்ந்த ஒன்று’ என்று கூறியுள்ளார். ‘வைரஸ் தோற்றம் பற்றி அணுகும் போது, அறிவியல் பூர்வமான மனப்பான்மையுடன் அதனை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், போலியான தகவல் மற்றும் பொய்க் கூற்றுகளால் ஏற்படும் பாதிப்பு பெரும்பாலும் வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புக்குச் சமமாக இருக்கும்.
அமெரிக்காவின் அறிவியல் மற்றும் மருத்துவத் துறையின் வளர்ச்சி நிலை பாராட்டத்தக்கது என்றபோதிலும், அந்நாட்டின் அரசியல்வாதிகளின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாக உள்ளது. வைரஸ் தோற்றம் பற்றி அவர்கள் சதித் திட்டத்தை உருவாக்கி பரப்புகின்றனர். ஆதாரம் இல்லாத சிகிச்சை முறைகளை ஆதரிக்கின்றனர். இதர நாடுகளையும் அமைப்புகளையும் அவர்கள் வெளிப்படையாகக் குறைகூறி வருகின்றனர். இத்தகைய செயல்களால் எந்த பயனும் இல்லை. நாம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே நோய் தொற்றால் ஏற்படும் அறைகூவல்களைச் சமாளிக்க முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை உலகம் முழுவதும் எதிர்கொள்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த இற்றைவரை சிகிச்சைகளோ மருந்துகளோ இல்லாத நிலையில்இ அரசியல் புரிவதை விடுத்து, உலக சுகாதார அமைப்புடனும் சீனாவுடனும் மோதல் போக்கினைத் தவிர்த்து, அறிவியல் தளத்தில் செயலாற்ற அமெரிக்கா முன்வர வேண்டும்.
(நன்றி: வானவில்)