கனடா வாழ் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான நக்கீரன் என்னும் புனைபெயர் கொண்ட வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்களின் சமூகம், அரசியல், இலக்கியம் போன்ற துறைகளில் ஆற்றிய பணிகளைப் பாராட்டியும், மதிப்பளித்தும் கடந்த 24/06/2023 சனிக்கிழமை அன்று தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் பெரும் விழா ஒன்று எடுக்கப்பெற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திரு வின் மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவை பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர் நாதன் வீரபாகு அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
பேராசிரியர்கள் சந்திரகாந்தன், பாலசுந்தரம் மற்றும் திருவாளர்கள்குணநாதன், , சாமி அப்பாத்துரை, வின் மகாலிங்கம், மைதிலி வில்சன், நிமால், வீர சுப்பிரமணியம், சிவன் இளங்கோ மற்றும் அன்பரசி, யுவனித்தா நாதன்ஆகிய பல்வேறு பிரமுகர்கள் இவ்விழாவில் நக்கீரன் அவர்கள் தொடர்பான பாராட்டுரைகளை வழங்கினார்கள்.
விழாவில் “பன்முகப் பேராளுமை நக்கீரன்” என்ற நூலும் வெளியிடப்பட்டது.
அந்த நூலில் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி(இந்தியா), பேராசிரியர்கள் சந்திரகாந்தன், பாலசுந்தரம், மற்றும் சம்பந்தன், சுமந்திரன் எம். பி உட்பட்ட அரசியற் பிரமுகர்கள்,துறைசார் அறிஞர்கள், அவரது நண்பர்கள்,அவரது மகள் எனப் பலரும் நக்கீரன் குறித்து எழுதியுள்ளார்கள்.
நக்கீரன் அவர்கள் தனது குடும்பத்துக்குச் செலவழித்த நேரத்தையும் விட அரசியல், சமூகம், இலக்கியப் பணிகளுக்குச் செலவிட்ட நேரம் அதிகமானது. 90 வயதைத் தாண்டியும் தற்போதும் அந்தப் பணியை அவர் தொடர்கிறார் என்று பலரும் தங்கள் உரைகளில் குறிப்பிடத்தவறவில்லை.
கலை நிகழ்ச்சிகளும் விழாவின் உரைகளுக்கு இடையில் இடம்பெற்று சபையோரை மகிழ்வித்தன.