(மன்னார் நிருபர்)
(04-07-2023)
மன்னார் நகரில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளமை குறித்தும்,அதற்கான அனுமதியை உடன் நிறுத்தக் கோரியும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (4) மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்பிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் புனித செபஸ்தியார் ஆலய வீதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு முன்பாக புதிதாக மது விற்பனை நிலையம் ஒன்று திறக்கப்பட உள்ளதாக அறிகிறோம்.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு விதமான போதை பொருட்களால் சமூகத்தில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்கிறோம்.
குறிப்பாக இளையோர் மத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்கள் பலரும் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
அத்துடன் சாதாரண தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தின் பெரும் பகுதி இவ்வாறான போதை வஸ்துக்கு பயன் படுத்தப்படுவதால் குடும்ப வாழ்வில் பெரும் பின்னடைவை சந்திப்பதோடு சிறுவர்கள் மத்தியில் பல்வேறு உளத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
மன்னார் நகரத்தில் எந்த பகுதியிலும் அனுமதி வழங்குவது சமூக நிலையியலுக்கு உகந்தது இல்லை.
எனவே மக்கள் செறிந்து வாழும் பிரதேசமும் மிக கிட்டிய தூரத்தில் மூன்று ஆலயங்கள் இருப்பதாலும் அவ்விடத்தில் மதுபான விற்பனை நிலையம் திறப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் எவ்விதமான அரசியல் அழுத்தம் ஏற்பட்டாலும் அனுமதி வழங்கக் கூடாது என்பதை தங்களுக்கு சமூக நலனியல் நோக்கு நிலையிலிருந்து தெரிவித்துக் கொள்கிறோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.