இலங்கை தேசத்தின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவரான யாழ்ப்பாண ஓவியர் ஆசை இராசையா அவர்களுடனான எனது நினைவுகளை பதிவு செய்து அன்னாருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
2014-இல் ஊருக்கு சென்ற வேளை தான் அவருடைய அறிமுகம் கிட்டியது. ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த நோபெல் பிரின் ரேஸ் உரிமையாளர் அன்பர் ஸ்ரீ அவர்கள்தான் அங்கு அடிக்கடி வருகை தரும் அன்பர் ஆசை இராசையா அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். 2015 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட எனது முத்தமிழ் நூல்களான ‘வாழ்த்தும் வணக்கமும்’ (கவிதை) ‘தொலைந்து போன வசந்தகாலங்கள்’ (இயல்) ‘கவியின் காதல்’ (நாடகம்) ஆகிய நூல்களின் முகப்பு அட்டைகளுக்கு ஓவியம் வரைந்து தந்து எனக்கு மிகவும் நெருங்கிய தோழர் ஆனார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் வார இதழ்கள், சஞ்சிகைகளில் பிரசுரமாகும் சிறுகதைகளுக்கும் வேறு புதினங்களுக்கும் ஓவியம் வரைபவர்களை, அவர்களது தூரிகையை வடிவங்களுக்கூடாகவே அறிமுகமாகியுள்ளேன். முதன்முதலில் எமது தாயக ஓவியக் கலைஞர்களுடன் அறிமுகமாகி பழகியது புது அனுபவம். அவரது இல்லத்தின் சித்ரகூடத்தில் அவர் வரைந்த வண்ண ஓவியங்களைப் பார்த்து பிரமித்துப் போனேன். இப்படி ஒரு பிரம்மிப்பு பல வருடங்களுக்கு முன் நடிகர், ஓவியர், எழுத்தாளர், பேச்சாளர் திரு. சிவக்குமார் அவர்களது வீட்டுக் கூடத்தில் நாற்புறமும் வைக்கப்பட்டிருந்த அவரால் எழுதப்பட்டிருந்த ஓவியங்களையும், போட்டோ ஆல்பங்களையும் பார்த்துப் பார்த்து பிரமித்திருக்கிறேன்; வியந்திருக்கிறேன்.
அன்பர் ஆசை இராசையா நம்ம ஆளு. நமது மண்ணின் கலைஞர். பழகுவதற்கு இனிமையானவர், பண்பும் மனிதநேயமிக்க கலைஞர். கடந்த பத்து வருடத்திற்குள் நான்கு தடவை யாழ்ப்பாணம் சென்று உள்ளேன். எனது வருகையை அறிவித்ததும், இன்று என்ன ப்ரோக்ராம், எங்கு போக வேண்டும் எனக் கேட்டு பிரத்தியேகமாக ஒரு தலை கவசத்துடன் தனது டூவீலரை கொண்டு வந்து என்னுடன் பயணிப்பார். 2019 இல் நல்லூரில் நடந்த கம்பன் விழா கவியரங்கத் தலைமை ஏற்க வந்த தமிழ் அறிஞர் கவிஞர் செரிபுதீன் (கொழும்பு) அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, இலக்கிய உறவை வளர்த்தவர். எனது நூலான தொலைந்துபோன வசந்த காலங்களுக்கு யாழ். மூத்த ஊடகவியலாளர் திரு. ராதேயன் அவர்களிடமிருந்து மதிப்புரை எழுத வைத்தவர். என்னை மிகவும் நேசித்த மனிதநேய பண்பாளர் மறைவு எனக்கு பெரிய இழப்பாகும். எனக்கு மட்டுமல்ல யாழ் பல்கலைக்கழக ஓவியப் பீடத்திற்கும், ஈழத்து ஓவியக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது உருவம் எனது மனத்திரையில் ஓவியம் ஆகவே நிலைத்துவிட்டது அவருடன் பழகிய நாட்கள் பசுமை நிறைந்தது அவர் தீட்டிய ஓவியங்களுக்கூடாக அவர் வாழ்கிறார்.
வீணை மைந்தன்- Canada