எமது யாழ்ப்பாணம் செய்தியாளர்
இலங்கையில் தொடரும் அரசியல்-பொருளாதார-சமூக நெருக்கடிகள் காரணமாக தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு சென்று தஞ்சம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவ்வகையில்,யாழ்ப்பாணத்தில் இருந்து சனிக்கிழமை (14)அதிகாலை எட்டுப்பேர் அகதிகளாக சென்று தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உள்நாட்டில் வேலை வாய்ப்புகுள் குன்றிய நிலையிலும், சுயமாக தமது காணிகளில் தொழில் செய்ய இயலாத நிலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஈழத்தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகத்தை நோக்கி பயணிக்கும் செயற்பாடு, போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆகியும் தொடரும் நிலையே தாயத்தில் உள்ளது என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொருளாதார ரீதியாக ஓரளவிற்கு வசதியாக உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சுவிஸ், பிரான்ஸ், யேர்மனி, நோர்வே உட்பட பல மேற்குலக நாடுகளிற்கு தமது உறவினர்களின் தயவில் புலம் பெயர்ந்து செல்லும் சூழல் காணப்படுகிறது.
ஆனால், சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோர், இருக்கும் சொத்துக்களையும் விற்று அருகிலுள்ள அண்டை நாடான இந்தியாவிற்கு சென்றாவது பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன், ஆயிரக்கணக்கான ரூபாவை படகோட்டிகளிடம் அளித்து இரவு நேரங்களில் நாட்டைவிட்டி வெளியேறி தமிழகத்தி ராமேஸ்வரம் கடற்பகுதியை சென்றடைகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற எட்டு பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதனர்.
தமிழக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் எட்டு ஈழத் தமிழர்களையும் மீட்டு விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு தமிழகம் சென்ற இரு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர்களில் இரு பெண்களும், இரு ஆண்களும் 4 சிறுவர்களும் விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
தமிழகம் சென்ன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பங்கள் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் மற்றும் ஆணைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டிற்கு அவர்கள் சென்று, முகாம்களில் தங்கினாலும், அங்கும் எந்தளவிற்கு அவர்களால் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொண்டு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதில் பல கேள்விகள் உள்ளன.
தமிழகத்தின் முகாம்களில் மட்டும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இன்னும் அகதிகளாக உள்ளனர்.