நடராசா லோகதயாளன்
தமிழ் மக்களிற்கான அதிகார பகிர்வு தொடர்பில் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்க நடத்திய கூட்டத்தில் அவருக்கும் இலங்கையின் மிக மூத்த தமிழ் அரசியல் தலைவரான சம்பந்தர் அவர்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் எழுந்துள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த புதன்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வு உட்பட பல விடயங்கள் தொடர்பில் உரையாட அந்த தமிழ் கட்சிகளை இலங்கை ஜனாதிபதி அழைத்திருந்தார். அந்த கூட்டத்தில் முதலில் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஜனாதிபதி தொடங்க, அதிகார பகிரிவு குறித்து முதலில் உரையாடலாம் என தமிழ் கட்சிகள் கூறியதை அடுத்து அது முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதிகாரப் பகிர்வு என்ற பெயரில், அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து நடைமுறைப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளைத் தமிழரசுக் கட்சி அடியோடு நிராகரித்தது. அதுமட்டுமின்றி இதன் போது ஜனாதிபதி ரணில் மற்றும் சம்பந்தர் ஆகியோரிடையே கடும் வாக்குவாதமும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் கூட்டணி அந்த யோசனைகளைச் செயற்படுத்தினால் அதற்குத் தமது கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தது. அரச பங்காளிகளான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் ரணிலின் யோசனைகளை ஆதரித்தனர். ஜனநாயகக் கூட்டணி எந்தக் கருத்தையும் தெரிவிக்காது அமைதி காத்தது. ரணிலின் கருத்தை அந்தக் கட்சி எதிர்க்கவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்வதற்கு முன்பாகத் தமிழ் அரசியல் கட்சியினரைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் தமிழ் தலைவர்களுடன் பேசி ஒரு இணக்கப்பட்டை ஏற்படுத்தி அதை தமது வெற்றியாக இந்தியா செல்லும் போது அதன் பிரதமர் மோடியிடம் காட்டிக்கொள்ள ரணில் விழைந்தார், ஆனால் இந்த கூட்டத்தில் அவர் எதிர்பார்த்த அந்த இணக்கப்பாடு ஏற்படவில்லை என்று கூட்டம் குறித்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகக் கூட்டணி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளும், அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, சுசில் பிரேமஜெயந்த, பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் தொடக்கத்தில் ஜனாதிபதி ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பேச்சைத் தொடங்கினார். அதில் பெரும்பாலானவை வடக்கு கிழக்கில் அரசு செய்வதற்கு உத்தேசித்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பானது. 10 வருடத் திட்டங்கள் உட்படப் திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். அந்த நிகழ்ச்சி நிரலின் இறுதிப் பகுதியிலேயே அதிகாரப் பகிர்வு குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் உரையின் இடையில் குறுக்கிட்ட தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன், “இன்று நாங்கள் பேச வந்தது அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவல்ல, அதிகாரப் பகிர்வு தொடர்பாகவே எனவே அதைப் பற்றிப் பேசுங்கள். அதிகாரப் பகிர்வு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் அபிவிருத்தியும் தானாகவே நடக்கும். எனவே முதலில் தீர்வு குறித்துப் பேசலாம்” என்றார்.
அதனை அடுத்து அதிகாரப் பகிர்வு என்ற தலைப்பின் கீழ் ஆளும் தரப்பினர் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி சபையில் முன்வைத்தார். பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஆளும் தரப்பு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளையும் அவர் விவரித்தார்.
அதிகாரப் பகிர்வுக் குழு மற்றும் அமைச்சரவை ஆகியவற்றில் இந்த அதிகாரப் பகிர்வு குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார். பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதைப் பாதுகாக்கும் வகையில் அரசமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றார் ரணில்.
மாகாணச் சட்டங்களின் கீழ் ஒருங்கு நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் பலவற்றையும் மாகாண நிரலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். உதாரணமாக கல்வி, விவசாயம் போன்ற விடயங்களில் முழு அதிகாரமும் மாகாண சபைகளிடமே ஒப்படைக்கப்படும் என்றார். இதேவேளை காணி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது அரசு வழங்கிய உத்தேச தீர்வு ஆவணத்தில் இல்லை.
கல்வித்துறையில் பெரும்பாலான விடயங்கள், பல்கலைக்கழங்களை உருவாக்குவது உள்ளிட்ட அதிகாரங்கள் மாகாண சபையின் நிரலுக்குக் கீழேயே கொண்டுவரப்படும். கல்விக் கொள்கைகள் சார்ந்த விடயங்களை மத்திய அரசு தீர்மானிக்கும் என்று அந்த முன்மொழிவு ஆவணம் கூறுகிறது.
:விவசாயத்தை நவீனமயப்படுத்துவது மற்றும் அதை அடித்தளத்தில் இருந்து மேம்படுத்தவது தொடர்பான அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.
மாகாண சுற்றுலா வளர்ச்சித் துறையை உருவாக்குவதற்கான சட்டமூலம் கொண்டு வரப்படும்.
தொழிற்துறை முதலீட்டில் 250 மில்லியன் டொலர் வரையிலான முதலீடுகளை சிறிய மற்றும் நடத்தர வர்த்தகத்திற்காகக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களை வழங்கும் சட்டமூலம் உருவாக்கப்படும்.
மாவட்டச் சபைகளை உருவாக்குவதற்கான சட்டமூலமும் முன்வைக்கப்படும்.
அதேபோன்று மாகாண சபைகளுக்குரியவைகளாக இருந்தபோதும் மத்தியால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல விடயங்களை மீண்டும் மாகாணங்களுக்கே ஒப்படைக்கும் வகையிலான அரசமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
அதுதான் அதிகாரப் பகிர்வு தொடர்பான எமது முதல் கட்டம். இரண்டாவது கட்டம் அபிவிருத்தி தொடர்பானது. மீள் சக்தி உருவாக்கத்துறையில் வடக்கு மாகாணத்திற்கு முதலீடுகளை வரவைப்பது, பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தியை ஊக்குவிப்பது, மீள் சக்தி உருவாக்கத்திற்கான (சூரிய கல மின் உற்பத்தி) மத்திய நகரமாக பூநகரி உருவாக்கப்படும்”
யாழ்ப்பாணத்திற்கான குடிதண்ணீர் விநியோகத்திற்காக பூநகரியில் ஒரு தண்ணீர் தாங்கி உருவாக்கப்படும். காங்கேசன் துறைமுக அபிவிருத்தி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா விமான நிலையங்களின் அபிவிருத்தி, தென்னிந்தியாவுக்கும் வடமாகாணத்திற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பு, காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய இடங்களில் பொருளாதார அபிவிருத்தி வலயங்கள் உருவாக்குதல், சுற்றுலாத்துறை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் மேம்படுத்தல், தெங்குச் செய்கையை வன்னியில் ஊக்குவித்தல், யாழ்ப்பாணத்தைப் பல்கலைக்கழக நகரமாகத் தரமுயர்த்துதல் ஆகியவற்றை அபிவிருத்தித் திட்டங்களாக ஜனாதிபதி அந்த ஆவணத்தில் முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “ராஜபக்ச ஆட்சி காலத்தில் மூன்று தடவைகள் இந்தியாவுடன் சேர்ந்து 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும், அதையும் தாண்டி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதாகவும் மகிந்த ராஜபக்ச வாக்குறுதியளித்திருந்தார். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தேவை என்று அவர் சொல்லும்போது, 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால்கூட அது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வாக இருக்க முடியாது என்பதே பொருள்” என்றார். அப்படியிருக்கும்போது பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத 13 என்பது குறைப்பதே தவிர அதிகரிப்பதாகாது என்று சுட்டிக்காட்டினார்.
“2015இல் உங்களது ஆட்சியில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பல இணக்கங்கள் எட்டப்பட்டன. அந்த அறிக்கைகளும் இருக்கின்றன. அதில் பொலிஸ் அதிகாரம் குறித்து ஒரு உப குழு நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டது, தீர்வு காணப்பட்டது. அதன் பின்னர் பொலிஸ் அதிகாரங்கள் இல்லை என்பது அர்த்தமற்றது என்றார்.
இதற்குப் பதிலளித்த ரணில், ”நான் ரணில் விக்கிரமசிங்கவே தவிர ரணில் ராஜபக்ச அல்ல, ஜனாதிபதி ராஜபக்ச சொல்லியவற்றின் பின்னால் நான் செல்ல முடியாது, நான் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக முதலில் கூறியபோது பெரும் குழப்பங்கள் வெடித்தன. அதனால் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பின்னர் தீர்மானிக்கலாம் என்று நாம் முடிவு செய்தோம், ஏனைய அதிகாரங்கள் குறித்து இங்குள்ள அமைச்சர்களால் இரு நாள்களுக்கு முன் ஒரு அறிக்கை தரப்பட்டிருக்கிறது. நானும் அதை ஏற்கிறேன். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களாக இருந்தால் அது குறித்து நாம் முன்னேறியச் செல்லலாம். பொலிஸ் அதிகாரங்கள் குறித்துத்தான் முரண்பாடு இருக்கிறது. மற்றெல்லாவற்றையும், மத்திய அரசு எடுத்தவை உள்ளிட்ட எல்லாவற்றையும் தருவதற்கு நான் தயார்” என்றார் ரணில்.
நீங்கள் பெப்ரவரியில் ஒரு காலக்கெடு கொடுத்தீர்கள், அதற்குள் எதுவும் நடக்கவில்லை. அதன் பின்னர் கடைசிக் கூட்டத்தில் ஜூலை முடிவதற்குள் என்று சொன்னீர்கள், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை எனவே முடிவில்லாத இந்த விடயத்தில் நாங்கள் பங்கெடுக்கவிரும்பவில்லை. அதற்காக நாம் இதனை எதிர்க்கவும் இல்லை என்று சுமந்திரன் அவருக்கு மறுமொழி அளித்தார்.
”ஜூலை 31க்கு முன்னர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவதாக நான் உறுதியளிக்கவில்லை. முன்மொழிவுகளை வைக்கிறேன் என்றுதான் சொன்னேன். அதனை இப்போது வைத்திருக்கின்றேன். அதற்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா இல்லையா என்பதே கேள்வி” என்றார் ஜனாதிபதி.
இந்த முன்மொழிவுகளை நேர்மையான அதிகாரப் பகிர்வாக நாங்கள ஏற்றுக்கொள்ளவில்லை என்று நேரடியாகவே பதிலளித்தார் சுமந்திரன். அதற்காக இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக நாங்கள் நிற்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தருணத்தில் ஏனைய கட்சித் தலைவர்கள் அமைதி காத்ததைத் தொடர்ந்து மற்றைய கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் நான் அறிய விரும்புகின்றேன் என்றார் ரணில் சற்றுக் கோபமாக.
இந்தக் கட்டத்தில் 13ஐப் பலப்படுத்தும் எந்த விடயத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளுக்கும் தனது தமிழ் மக்கள் கூட்டணிக் கட்சி முழு ஆதரவையும் வழங்கும் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதனை நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கு, ”இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சர்களுடன் இந்த விடயம் குறித்துக் கலந்தாலோசித்து இதனை முன்கொண்டு செல்லலாம், அப்போது மற்றவர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம் யாருக்கு வர விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வரலாம் மற்றவர்கள் விட்டுவிடலாம். ஆனால் இதனை முன்கொண்டு செல்வதில் நான் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்” என்றார் ரணில்.
அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் “இந்தப் பிரச்சினைக்கு நீண்ட கால மற்றும் குறுகிய காலத் தீர்வுகளை முன்வைப்பீர்கள் என்று கூறியிருக்கிறீர்கள், அதில் குறுகிய காலத் தீர்வாக இது இருக்கும்” என்று தான் கருதுவதாக கூறினார்.
தமிழரசுக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தர், ஜனாதிபதியின் செயற்பாடுகளை ஒரு பிடி பிடித்தார். கடும் கோபத்தோடு கருத்துக்களை முன்வைத்தார். ”முடிவின்றித் தொடரும் இந்த முயற்சிகளை நிராகரிக்கின்றோம், இந்தச் செய்தி நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகச் சென்று சேரும்”.
இவை தொடர்பான செய்தி வீடியோக்களை ஊடகங்களிற்கு அனுப்பி வைத்த ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவு ஜனாதிபதியின் குரலை அனுப்பி வைத்துள்ளபோதும் வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் சம்பந்தனின் வீடியோவில் இருந்த குரலை முழுமையாக நீக்கியே ஊடகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.