நடராசா லோகதயாளன்
இலங்கைக்கான கனடா தூதுர் எரிக் வால்ஷை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும. என்று இனவாத கருத்துக்களை தொடர்ந்து கக்கிவரும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
வட மாகாணத்திற்கு இந்த வாரம் விஜயம் செய்த கனேடிய தூதர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பலரை சந்தித்து சமகால அரசியல், சமூக செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
கனேடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்றான மார்க்கம் பகுதி வாழ் தமிழர்களின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய மார்பக சிகிச்சை சிறப்பு பிரிவை அவர் தொடங்கிவைத்தார்.
முன்னதாக அவர் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞாம் சிறீதரனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அதன் போது ஈழத்தமிழர்களின் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரன் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் படங்களுடன் அவர் பதிவு ஒன்றை செய்திருந்தார்.
இதன் போது இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுசேர்க்கும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநோச்சி மாவட்டக்கிளையினால் நடாத்தப்பட்ட நிகழ்வையும் கனேடிய உயர்ஸ்தானிகல் நினைவுகூர்ந்திருந்தார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் மேலும் விரிவாக பதிவுகளைச் செய்திருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், “ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்டுதல், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றின் காலத் தேவை 13வது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா அமெரிக்கா, பெல்ஜியம் போன்றா நாடுகளில் பின்பற்றப்படும் சமஸ்டி முறைமையை அடிப்படையாகக் கொண்டு அதிலும் குறிப்பாக பல்லின சமூகங்கள் வாழும் கனேடிய நாட்டைப் பின்பற்றி இலங்கையில் சமஸ்டியை நடைமுறைபடுத்த வேண்டியுள்ள யதார்த்த புறநிலைகள், குறிப்பிடத்தக்கது”.
இந்த கலந்துரையாடலின் போது, போருக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 4374.8 ஏக்கர் காணிகள் தொடர்பான விவரமும், 2009க்கு பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 71 விகாரைகள் குறித்த விவரண அறிக்கை ஒன்றையும் சிறீதரன் கனேடிய உயர்ஸ்தானிகள் எரிக் வால்ஷிடம் கையளித்திருந்தார்.
இதேவேளை தனது வட மாகாணத்திற்கான பயணம் குறித்து கனேடிய தூதரும் தனது டிவிட்டர் பக்கத்தில் படங்களுடன் செய்திகளை பகிர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்துறை மக்களிடமிருந்து கேட்டறிந்ததாகவும் பதிவு செய்திருந்தார்.
இவற்றின் பின்புலத்திலேயே சரத் வீரசேகரவின் இனவாத கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள், அபிலாஷைகள் ஆகியவை தொடர்பில் பன்னாட்டுச் சமூகம் கரிசனை செலுத்திவரும் வேளையில், இப்படியான இனவாதிகளின் கருத்துக்கள் மேற்குலக நாடுகள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளை அதிருப்தியடைச் செய்துள்ளன.
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவர் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறி வருகிறார்.
இலங்கையில் தற்போது மிகவும் மோசமான இனவாத கருத்துக்களை அதிகம் பரப்பிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அவப்பெயருக்கு அவர் ஆளாகி வருகிறார். அண்மையில் தமிழ் நீதிபதி தொடர்பில் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக குருந்தூர் மலையில் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பிலான விசாரணை ஒன்றை நீதவான் முன்னெடுத்துக்கொண்டிருந்த வேளையில் தானும் அந்த விடயத்தில் கருத்து கூற வேண்டும் என்று அழைக்கப்படாமல் அங்கு சென்றிருந்த சரத் வீரசேகர கோரியதை நீதவான் மறுத்துவிட்டார். நீதிமன்ற விசாரணையில் அரசியல்வாதிகளின் கருத்துக்களிற்கு இடமில்லை, அதற்கு இடமளிக்க முடியாது என்று நீதவான் மறுத்த நிலையில் அவரை பற்றிய இனவாத கருத்துக்களை நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சரத் வீரசேகர கூறியிருந்தார்.
“அந்த தமிழ் நீதிபதி இது சிங்கள பௌத்த நாடு என்பதை உணர வேண்டும்” என்று மோசமான கருத்தை தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த கருத்திற்கு வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்ட நிலையில் அதே நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது கனேடியத் தூதுவர் தொடர்பிலும் கருத்துரைத்துள்ளார்.
கனேடிய தமிழ் வமசாவளி நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசு அண்மையில் விசா மறுத்தது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் இன அழிப்பு மாதம் தமது நாட்டின் அனுசரிக்கப்படுவதை ஆதரித்திருந்தார்.
கனடாவிற்கு எதிராக தொடர்ந்து மோசமான கருத்துக்களை வெளியிட்டுவரும் இனவாதிகளை இதுவரை நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அவர் உறுப்பினராக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவோ கண்டிக்கவில்லை.