கேரள மாநிலம் கண்ணூரில் தாழேச்சொவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. ஜூலை 21 இரவு 10 மணியளவில் இந்த ரயில்வே கேட்டை ஒரு கார் கணக்கு முயன்றது. அப்போது அந்த காரை ஓட்டிய நபர் திடீரென்று ரயில்வே தண்டவாளத்தில் காரை இறக்கினார். பின் சிறிது தூரம் தண்டவாளத்தில் அந்த கார் சென்றது. இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற பலரும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
ஆனாலும், அந்த காரை ஓட்டி சென்ற நபர் தொடர்ந்து தண்டவாளத்திலேயே பயணித்தார். பின்னர் ஒரு கட்டத்தில் தண்டவாளத்தில் கார் சிக்கிக் கொண்டது. அப்போது ரயில் வந்தால் மிகப்பெரும் விபத்து ஏற்படும் என கருதிய அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தண்டவாளத்தில் சிக்கி இருந்த காரை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போதுதான் அந்த காரை ஓட்டிய நபர் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்தது தெரிய வந்தது. அந்த நபரை தட்டி எழுப்பிய போதிலும் எழவில்லை.
இதனால் கோபமடைந்த மக்கள் காரை தண்டவாளத்தில் இருந்து நகர்த்த முயன்றனர். ஆனால் கார் வசமாக சிக்கிக் கொண்டதால் அங்கிருந்து கொஞ்சம் கூட நகர்த்த முடியவில்லை.
இது குறித்து கேட் கீப்பருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். பின்னர் கண்ணூர் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விரைந்து சென்று பொது மக்களின் உதவியுடன் அந்த காரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து காரை ஓட்டிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த நபர் கண்ணூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பதும், நன்றாக குடித்துவிட்டு எங்கே காரை ஓட்டி செல்கிறோம் என தெரியாத அளவுக்கு காரை ஓட்டியதும் தெரிய வந்தது. சாலையில் தான் காரை ஓட்டி செல்கிறோம் என ஜெயபிரகாஷ் நினைத்தாராம். இதையடுத்து குடிபோதையில் இருந்த ஜெயபிரகாஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை கைப்பற்றினர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள் ஒரு ரயில் அந்த வழியாக கடந்து சென்றது. தக்க சமயத்தில் காரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது