13வது சீர்திருத்தம் குறித்து சிறீகாந்தா தெரிவித்த கருத்து
ஏமாற்றமே தொடரப்போகின்றது என்றால், 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக மறந்துவிட்டு, சாத்தியமான வேறு வழிமுறைகளை அரசியல் ரீதியாக எமது மக்கள் நாட வேண்டி இருக்கும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கட்சி இன்று (25.07.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
13வது திருத்தச் சட்டத்தின் கீழான பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது பற்றி அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்தியே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார்.
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்க்கும் சகல தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கும், அவர்களுடைய நோக்கம் நிறைவேறுவதற்கான நல்லதோர் சந்தர்ப்பத்தை இந்த பேச்சுவார்த்தைகள் வழங்கப்போகின்றன.
பேச்சுவார்த்தைகளில் எழப்போகும் எதிர்ப்புக்களை காரணம் காட்டி, இந்த விடயம் கைவிடப்படலாம் அல்லது கணிசமான காலத்திற்கு ஒத்திவைக்கப்படலாம்.
இல்லையேல், பொலிஸ் அதிகாரங்களை வெட்டிக் குறைத்து, வலுவற்றதாக்கி, வெறும் கண்துடைப்பாக ஒரு சில அதிகாரங்களோடு மாத்திரம், மாகாண பொலிஸ் படையினை நிறுவுவதற்கு சிங்கள கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை எட்டப்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
தமிழ் மக்களை பொறுத்தமட்டில், 13வது திருத்தத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில் எத்தவொரு மீளாய்வுக்கோ அல்லது சமரசத்துக்கோ இடமில்லை. மட்டுப்படுத்தப்பட்ட முறையில் அமைந்திருக்கும் இந்த அதிகாரங்களில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்க முடியாது.
சிங்கள அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஆட்சேபணைகளின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் பிடிவாதம் காட்டினால் மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்கள் அர்த்தம் அற்றுப் போய்விடும்.
குறுகிய காலத்திற்குள் 13வது திருத்தத்தின் பிரகாரம் காணி, பொலீஸ் அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் இருப்போடும், பாதுகாப்போடும் சம்பந்தப்பட்ட இந்த விடயங்களில் இனிமேலும் ஏமாற்றப்பட தமிழ் மக்கள் தயாரில்லை.
ஏமாற்றமே தொடரப்போகின்றது என்றால், 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக மறந்துவிட்டு, சாத்தியமான வேறு வழிமுறைகளை அரசியல் ரீதியாக எமது மக்கள் நாட வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.