உள்ளூர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு – நகரப் பகுதியில் இடமாற்றம் கேட்கும் உத்தியோகத்தர்கள்
யாழ். மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உள்ளக இடமாற்றம் தயார் படுத்தப்பட்டுள்ள நிலையில் சில உத்தியாத்தார்கள் இடமாற்றத்தை தடுப்பதற்கு அரசியல்வாதிகளினால் மாவட்ட செயலகத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் இடமாற்றம் இன்றி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நீண்ட காலமாக ஒரே இடத்தில் கடமையாற்றிய வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மாவட்ட செயலகத்தால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உள்ளே பணியிட மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை யாழ்ப்பாண நகர பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் அதற்கேற்ற வகையில் மாவட்ட செயலகம் அல்லது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இடமாற்றம் வழங்குமாறு அரசியல்வாதிகளுடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறியக் கிடைக்கிறது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தீவகப் பகுதியில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் அரச உத்தியோகத்தர் ஒருவர், என்னை போன்ற பலர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தீவகப் பகுதிகளில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வருகிறோம்.
தற்போது மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளக இடமாற்றத்தில் அனேகமானவர்கள் யாழ்ப்பாண நகரத்தை அண்டிய பிரதேச செயலகம் அல்லது மாவட்ட செயலகத்தில் பணி இடமாற்றத்தை பெற முண்டி அடிக்கிறார்கள்.
அதற்காக அரசியல் தலையீடுகளை பணியிட மாற்றத்தில் செலுத்துவதன் மூலம் தமது இருப்புக்களை தக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்மையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் யாழ்ப்ணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வெளி மாவட்டத்திற்கு உரிய காலப்பகுதியில் இடமாற்றங்கள் வழங்கப்படாத காரணத்தால் வெளி மாவட்டங்களில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வர முடியாத சூழல் ஏற்படுவதாக குற்றச்சாட்டியது.
ஆனால் அதே அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் நல்லூர் பிரதேச செயலகத்திலிருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடும் சமர்ப்பித்துள்ளார்.
ஊடகங்களுக்கு ஒரு கருத்து தமக்கு பிரச்சனை என்றால் தமக்கு ஏற்ற வகையில் இடமாற்றங்களை பெற முயற்சிப்பது முன்ணுதாரணமான நடவடிக்கையாக அமையாது.
யாழ்ப்பாணத்தை வாசிப்பிடமாகக் கொண்ட பல அரச உத்தியோகத்தர்கள் இன்றும் சொந்த மாவட்டத்திற்கு திரும்ப முடியாமல் வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வருகின்றனர்.
ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உள்ளே இடமாற்றம் வழங்கப்படும் போது அதைக் கூட தமக்கு ஏற்ற பிரதேச செயலகத்தை வழங்குமாறு அழுத்தங்களைப் பிரியோகிப்பது ஏற்க முடியாது.
ஆகவே தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளக இடமாற்றத்தை மாவட்ட செயலகம் அழுத்தங்காளுக்கு அடி பணியாது சகலாரின் நலன்களை கருத்தில் கொண்டு பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.