பு.கஜிந்தன்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் 1988 ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தத்தை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் முழுமையாக நடைமுறைப்படுத்தவோ அல்லது இல்லாது ஒழிக்கவோ முதுகெலும்பற்ற தலைவர்களாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் நேற்றையதினம் (11) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
நாடாளுமன்றத்திலும் வெளியிலும் 13 வது சரத்தை நீக்க வேண்டும் என கூச்சல் இடும் சிங்கள இனவாதிகளால் செயற்பாட்டில் வெற்றி கொள்ள முடியவில்லை. காரணம் இந்தியாவை பகை சக்தியாக்க முடியாத நிலமை ஆனால் மாறாக இனவாதம் பேசுபவர்கள் 13 எதிர்ப்பதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கின்றனர்.
13 வது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டும் என முன்வரும் ஆட்சியாளர்கள் அடுத்த முறை தங்களின் ஆட்சிக் கதிரை பறி போய்விடும் என்ற பயத்தின் காரணமாக பேச்சளவில் மட்டும் தங்களது ஆட்சியை முன் நகர்த்த முனைகின்றனர் இன்றைய ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அடுத்த தேர்தலை நோக்கியே பேசுகிறார்
நாட்டின் அமைதிக்கு அதிகாரப் பகிர்வு தான் நிரந்தர தீர்வு ஆனால் 13 வது திருத்தம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட்டால் இனவாதத்திற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைந்து இனங்களிடையே ஐக்கியம் உருவாக வழி திறக்கும் அத்துடன் நிரந்தர அமைதிக்கான அத்திபாரமாக அமையும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன மோதலுக்கான தீர்வை சிங்கள கடும் போக்களரின் எதிர்ப்புகள் இன்றி தீர்வு கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் மகிந்த ராஜபக்ச வுக்கு கிடைத்தது அதனை அவர் பயன்படுத்தவில்லை ஆனால் எதிர்வரும் காலத்தில் அதிகாரத்திற்கு வருபவர்கள் இனப்பிரச்சினையை முடிவுறுத்தா விட்டால் நாடு இனவாதத்தால் அழியும் – என மேலும் குறிப்பிட்டுள்ளார்.