பு.கஜிந்தன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் நேர்மையான அரசியல் தலைவர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. என்றாலும் அவர்களில் நேர்மையான ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நேர்மையான ஒருவரை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும்.
இவ்வாறு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96ஆவது ஜனனதினம் கடந்த சனிக்கிழமை வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. இதன் நினைவுப்பேருரையை நிகழ்த்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது,
கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது
13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறையானதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சூட்டோடு சூட்டாக இந்தியப் பிரதமருக்குச் சொன்னவர் தளபதி அமிர்தலிங்கம். இலங்கை விவகாரத்தில் இந்தியாவைத் தாண்டி எந்தவொரு சக்தியும் தலையீடு செய்ய முடியாது என்ற எண்ணவோட்டம் அன்று இருந்தபோதும், இந்தியப் பிரதமருக்கு அவ்வாறு துணிந்து கடிதம் எழுதினர்.
எமது மக்களுக்கு எது தேவையோ அதனையே நாம் கோரவேண்டும். இன்னொரு தரப்பின் தேவைக்காக எமது நிலைப்பாட்டை கொள்கையை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது. இப்போதும் அந்தக் காலச் சூழல் பொருத்தமானது.
13ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்குத் தீர்வுக்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது அவர்களுக்கு தீர்வாகவில்லை என்பதால்தான் இந்த நாட்டில் போர் மூண்டது என்று நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியிர் ஹரிணி அமரசூரிய உரையாற்றியிருந்தார்.
13ஆவது திருத்தம் தமிழர்களுக்கு தீர்வாகவில்லை என்பதை தமிழர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டின் ஆட்சியாளர்களும் கடந்த காலத்தில் ஏற்றிருந்தார்கள். அதனால்தான் 1987ஆம் ஆண்டின் பின்னர் மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிகா அம்மையாரின் தீர்வுப்பொதி, தற்போதைய ஜனாதிபதி அன்று பிரதமராக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய 6 சுற்றுப் பேச்சுக்கள் அதன் ஊடாக சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கான இணக்கம், மஹிந்த ராஜபக்ச காலத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சிக்குழுவின் தீர்வுப் பொதி, சில ஆண்டுகளுக்கு முன்னர் நல்லாட்சி காலத்தில் புதிய அரசமைப்பு என்று அனைத்து முயற்சிகளும் ஏன் எடுக்கப்பட்டன? 13ஆம் திருத்தம் தீர்வு என்றாலோ அல்லது அதனை அடிப்படையாக ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும் என்றாலோ இவ்வளவும் ஏன் நடந்தது?
உங்கள் எல்லோருக்கும் குதிரையும் கரட்டும் கதை தெரியும். ஒரு குதிரைக்கு முன்னால் கரட்டைக் கட்டி விட்டால் அதை நோக்கி குதிரை ஓடிக்கொண்டேயிருக்குமாம். அதற்கு ஒருபோதும் தெரியாது அந்தக் கரட் கிடைக்காது என்று. அதைப்போலத்தான், எங்களுக்கு முன்னாலும் 13ஆம் திருத்தம் என்ற கரட்டை கட்டி விட்டிருக்கின்றார்கள். அதன் பின்னால் நாங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றோம். அது தவறானது. அன்று எங்கள் தளபதி நிராகரித்தமை, 13ஆம் திருத்தத்தில் எதுவுமில்லை என்பதால்தான். அது உண்மை. இவ்வளவு காலத்தில் நாம் அதைப் பட்டறிவாகவும் பெற்றிருக்கின்றோம்.
ஒரு பேச்சுக்கு சொல்கின்றேன். 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திவிட்டால் எங்கள் பிரச்சினை தீர்ந்துவிடுமா? இல்லை. ஆனால், 13ஆவது திருத்தத்தை சிங்கள அரசாங்கம் தந்துவிட்டால் அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்வார்கள். சற்றுச் சிந்தித்துப்பாருங்கள். தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட்டோம். அவர்களுக்கு 13ஆவது திருத்தத்தை வழங்கிவிட்டோம். அதிகாரங்களை வழங்கிவிட்டோம். இதையெல்லாம் சொல்வார்களா? இல்லையா? அதனால்தான் சொல்கின்றோம், ஒன்றுமில்லாத 13ஐ பற்றி பேசி பேசி காலத்தை இழுத்தடிப்பதை விட சமஷ்டியைக் கோருவோம்.
எல்லோரும் சொல்கின்றார்கள். 13ஆவது திருத்தத்தைப் பெற்று படிப்படியாக முன்னேறலாம் என்று. இந்த 35ஆண்டுகளில் எவ்வளவு படிகள் ஏறியிருக்கின்றீர்கள்? 1987ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 13ஆவது திருத்தத்தின் ஊடாக எவ்வளவு முன்னேறியிருக்கின்றீர்கள்? சரி புலிகள் இருந்தமையால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால் போர் முடிந்த 14 ஆண்டுகளில் எவ்வளவு முன்னேறியிருக்கின்றீர்கள்? மாறாக பின்னோக்கித்தான் போயிருக்கின்றோம். திவிநெகும சட்டத்தைக் கொண்டு வந்து மாகாண அதிகாரங்களைத் திருடினார்கள். மத்தி தனக்குத் தேவையான ஒவ்வொன்றையும் மாகாணத்திலிருந்து பிடுங்கியிருக்கின்றது. தேசியப் பாடசாலைகள் என்ற பெயரில் மாகாணப் பாடசாலைகள் மத்தி வசமாகியிருக்கின்றது. அப்படியிருக்கையில் ஏன் 13 இன் பின்னால் இன்னமும் அலைந்து கொண்டிருக்கின்றீர்கள்? அதைவிடுங்கள்.
தேர்தலுக்கு அவர்கள் தயார்
தென்னிலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஐ ஏன் பேசுபொருளாகியிருக்கின்றார்? ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தின் ஒன்றாகவே அவர் இதனை முன்னிறுத்தியிருக்கின்றார். மீள முடியாத சர்வதேசக் கடன்கள், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களுக்காகக் கோத்தாபயவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து துரத்திய சிங்கள மக்களும் பிக்குகளும் 13ஐ பற்றியே இப்போது பேசிக்கொண்டிருக்கின்றன.
எதையும் திசைதிருப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கித் தமது காரியங்களைக் கன கச்சிதமாகச் செய்து முடிப்பதில் ரணில் மாத்திரமல்ல, சிங்கள ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் அது கைவந்த கலை.
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக சிங்கள தேசம் தயாராகின்றது. எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யப்போகின்றார்கள்? எங்கள் அரசியல் தலைவர்களிடம் அது தொடர்பில் ஏதாவது உரையாடல் இருக்கின்றதா? இல்லை. எல்லோரும் சிங்களத்தின் தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தலுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றார்களே தவிர, நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்பது பற்றிச் சிந்திக்கவில்லை.
கோத்தாபய விரட்டப்பட்டதன் பின்னர் சிங்கள – பௌத்த பேரினவாதம் மீண்டும் எழுச்சியுறாது என்று பலரும் சொல்லியிருந்தார்கள். ஆனால் காலம் அது பொய் என்பதை கண்முன்னே காட்டுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்கள் யாரும் தமிழர்களின் வாக்குகள்தான் தீர்மானமிக்கது என்று நினைத்து அவர்களுடன் பேரம் பேசலுக்கு போகக்கூடாது என்பதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் தெளிவாக இருக்கின்றது. அதற்கான நகர்வுகளாகவே, இனவாதத் தீயை மூட்டியிருக்கின்றது
என்னைப் பொறுத்தவரையில் சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்?
அதேவேளை, ஆட்சியிலிருக்கும் எந்தவொரு ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்தின் உதவியின்றி எதுவும் செய்யமுடியாது என்றால், தமிழ் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிவு செய்யக் கூடிய நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தினால் போதுமே. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ளாமல் முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பார்வையாளர்களாவதே பொருத்தம் – – என்றார்.