நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வின் போது
மேலும் 4 சட்ட வைத்திய அதிகாரிகளை இணைத்துக்கொள்ள வேண்டும் என பொலிசார் அறிக்கை சமர்ப்பித்தபோதும் தேவை ஏற்பட்டால் இணைக்கலாம் என்ற இணக்கத்தின் அடப்படையில் செப்டம்பர் 5 ஆம் திகதி புதைகுழி அகழ்வு இடம்பெறும் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை புதன்கிழமை-ஆகஸ்ட் 31 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.கே.நிரஞ்சன், ரணித்தா ஞானராசா, வி.எஸ்.தனஞ்சயன், காணாமல் போன அலுவலகத்தினுடைய சட்டத்தரணிகளான எஸ். துஷ்யந்தினி, ஜெ.தர்பரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் கா.சண்முகதாசன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பொலிஸ் மா அதிபர் சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா, கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர் பலரும் முன்னிலையாகியிருந்தனர்.
கடந்த வழக்கு விசாரணையில் இந்த அகழ்வில் தொடர்புடையவர்கள் மற்றும் அனைத்து திணைக்களங்களும் புதன்கிழமை விசாரணையின் போது நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்புக்களுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மேலும் நான்கு சட்ட வைத்திய அதகாரிகளை இனைக்குமாறு பொலிசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட சமயம் இது யாரின் கோரிக்கை என நீதவான் கோரிய சமயம் தமது அறிக்கை எனப் பொலிசார் தெரிவித்தனர். அதாவது கொழும்பு, குருநாகல் வைத்தியசாலைகளின் மூன்று சட்ட வைத்திய அதகாரிகளும் றுகுணு பல்கலைக்கழக பேராசிரியர் என நால்வரை இணைக்குமாறே பொலசார் நீண்ட நேரம் கோரிக்கை விடுத்தனர்.
இருந்தபோதும் மாவட்ட நீதிபதி ஏற்கனவே உத்தரவு வழங்கி விட்டார். மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் மேலும் இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர் இதனால் தற்போது மேலதிக அதிகாரிகள் தேவை கிடையாது. அதிக பணி அல்லது மேலதிக தேவை என வைத்திய அதிகாரிகள் கோரிக்கை விடுத்தால் இணைப்பது தொடர்பில் ஆராயலாம் என சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த சமர்ப்பணத்தை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏற்பதாக இணைக்கம் தெரிவித்தார்.
இதன்போது அகழ்வை ஆரம்பிக்கும் பணிக்காண பணத்தை விடுவிக்க அனைத்தும் தயாராகவுள்ளதாக மாவட்டச் செயலக கணக்காளர் தெரிவித்தார். அந்த இடத்தில் கொட்டகை அமைக்க ஒரு வாரம் தேவை என தொழில் நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்தபோதும் சட்ட வைத்திய அதிகாரி 3 தினங்கள் போதும் எனக் கூறியதற்கு அமைய 5 ஆம் திகதி அகழப்படும் அரம்பிக்கப்படும் எனவும் ஊடகங்களிற்கு அனைவரும் கருத்து தெரிவிக்ககூடாது என சட்ட வைத்திய அதிகாரியால் கோரப்பட்டது. அதற்கு உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவிக்கும் உரிமை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரிக்கு வழங்கும் அதேநேரம் வெளியில் கருத்துரைப்பதனை தடுக்க முடியாது எனவும் கூறப்பட்டு அகழ்வுப் பணிக்காக 5ஆம் திகதி நிர்ணயம் செய்யப்பட்டது.
கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு நீதிமன்ற உத்தரவையடுத்து செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி-செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், பருவ மழை அதற்கு ஒரு தடையாக இருக்குமோ என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.