பு.கஜிந்தன்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து
இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர்.
இந்தியாவின் தமிழகத்துக்கு, 14 பேர் கொண்ட வடபகுதி மீனவர்கள் கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேச தீர்மானித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் புனித பிரகாஸ், கடந்த முதலாம் திகதி இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தோம்.
குறித்த மகஜர் கையளித்து 14 நாட்களுக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடில் காத்திரமான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்த நிலையிலேயே குறித்த முடிவை எட்டியதாக தெரிவித்தார்.
14 நாட்களுக்குள் தீர்வு காணப்படாவிடில் அடுத்து வரும் நாட்களில் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.