பு.கஜிந்தன்
உலகப்புகழ்பெற்ற FAST FOOD விரைவுச் சேவை வர்த்தக உணவகங்களில் பணிக்கு அமர்த்தக்கூடிய வகையில் மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக கற்கைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காரைநகரில் இயங்கிவரும் தொழில்பயிற்சி நிலையத்தில் இதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், பயிற்சியை மேற்கொள்ளத் தேவையான முழுமையான சமயலறை வசதிகள் பீட்சா ஹட் நிறுவனத்தின் அனுசரணையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் அங்குரார்ப்பண வைபவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில், தொழில்பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பீட்சா ஹட், யு-லீட் மற்றும் சேவாலங்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காரைநகர் தொழில்பயிற்சி நிலையத்தில் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறி முழு அளவில் இடம்பெறுவதுடன், அதனுடன் இணைந்ததாக விரைவு சேவை உணவக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இங்கு பயின்ற பலர் யாழில் முன்னணி ஹோட்டல்கள் உட்பட பல உணவகங்களில் வேலை செய்கின்றனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விரைவு சேவை உணவக பயிற்சிகள் மேலும் பலருக்கு ஹோட்டல் முகாமைத்துவ துறையில் வேலைவாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
16 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த கற்கைநெறியைத் தொடர விரும்பின் காரைநகரில் அமைந்துள்ள தொழில்பயிற்சி நிலையத்துடன், தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.