கனடா ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற பாராட்டு உபசார வைபவத்தில் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் உருக்கத்தோடு வேண்டுகோள்
“எமது தாயக மண்ணில் இசையை முழு நேரத் தொழிலாகக் கொண்ட தாயகக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள். அவ்வாறான கலைஞர்களுக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. எனவே எமது தாயகக் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் தமிழ் உறவுகள் ஆதரவு நல்க வேண்டும். அவமர்களின் பலரை வெளிநாடுகளுக்கு அழைத்து சந்தர்ப்பங்கள் வழங்கவேண்டும். அத்துடன் நாம் தெனனிந்தியக் கலைஞர்களையும் மதிக்கின்றோம். அவர்களில் பலர் இசையே முழு நேரத் தொழிலாகச் செய்கின்றார்கள்.
எனவே அவர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்களையும் எமது புலம் பெயர் உறவுகளும் அமைப்புக்களும் தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும் எனது தந்தையான பாடகரும் அமரருமான சாந்தன் அவர்களுக்கும் அவரது புதல்வரான எனக்கும் தாங்கள் வழங்கிய ஆதரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றேன்”
இவ்வாறு கனடா ஸ்காபுறோ நகரில் ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தினர்’ நடத்திய பாராட்டு உபசார வைபவத்தில் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் உருக்கத்தோடு வேண்டுகோள் விடுத்தார்.
மேற்படி பாராட்டு உபசார வைபவத்திற்கு ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கேதா நடராசா அவர்கள் தலைமை வகித்தார். கென் கிருபா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து அங்கு சமூகமளித்த நண்பர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் அனைவரும் பாராட்டுரைகள் வழங்கினார்கள். ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கு தங்க மோதிரம் ஒன்றும் வழங்கப்பெற்றது.