நடிகர் விஷால் தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் கேட்டிருந்தார். இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமை லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது. இதையடுத்து தொகையை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்கவும் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதேசமயம், நான்கு வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்தின் விவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.