அன்னாரது வாழ்நாள் சாதனைகளைப் பாராட்டும் வகையில் எடுக்கப்பட்ட விழாவில் பொன்னையா விவேகானந்தன் புகழாரம்
“இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பிறந்து கல்வி கற்று பேராதனைப் பல்கலைகழகத்தில் புகுந்து அன்று தொடக்கம் கல்வியிலும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் அடைந்த உயரத்தை தனது மாணவர்களும் அடைய வேண்டும் என்று விரும்புவரே கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். இன்று அவருக்காக எடுக்கப்படும் விழாவில் நானும் ஒருவனாக பாராட்டுரை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்”
இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறையின் தலைவரும் தற்போது கனடா அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தின் தமிழ்த் துறையின் தலைவராக விளங்குபவராக உள்ளவருமான பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் வாழ்நாள் சாதனைகளைப் பாராட்டும் வகையில் எடுக்கப்பட்ட விழாவில் உரையாற்றிய கனடா வாழ் கல்வியாளரும் பேச்சாளருமான பொன்னையா விவேகானந்தன் புகழாரம் சூட்டினார்.
கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஒன்றாரியோ தமிழிசைக் கலா மன்றத்தின் கலா மண்டபத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவை கனடாவில் இயங்கிவரும் விபுலானந்தர் கலை மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
பல்வேறு துறைசார்ந்த பெரியோர்கள் கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் உரையாற்றினார்கள்.
கவிஞர் குமரகுரு கணபதிப்பிள்ளை விழாவை தொகுத்து வழங்கினார்.
விழாவின் ஆரம்பத்தில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் மற்றும் அவரது பாரியார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மண்டப வாசலில் வரவேற்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கல்வித்துறை சார்ந்த தம்பதிக்கு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பல பேச்சாளர்கள் வாழ்த்துரைகளை வழங்கினர். கலை நிகழ்ச்சிகளும் இடம்’பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பல்வேறு கல்வி மற்றும் கலை இலக்கியம் சார்ந்த அமைப்புக்கள் சார்பில் பாராட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
அண்ணாமலை பல்கலைக் கழக கனடா வளாக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் சார்பிலும். கனடா கவிஞர்கள் கழகத்தின் சார்பிலும். கனடா விபுலாந்தன் கலை மன்றத்தின் சார்பிலும் கௌரங்கள் செய்யப்பெற்றன.
இறுதியில் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் பதிலுரை ஆற்றினார் அவரது உரை மிகுந்த உருக்கத்துடன் இடம்பெற்றது. கல்வி மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையில் தான் தொடர்ச்சியாக ஈடுபாட்டோது இயங்கிவருவதற்கு தனது துணைவியாரும் மற்றும் குடும்பத்தினரும் மானசீகமாக ஆதரவை வழங்கிவருவதாகவும் தொடர்ந்து இலங்கையிலும் கனடாவிலும் மற்றும் ஏனைய நாடுகள் பலவற்றிலும் செயற்பட்டு வரும் கல்விச் சமூகம் தனக்கு வழங்கிவரும் ஆதரவிற்கு தான் நன்றி தேரிவிப்பதாகவும் கூறினார்.