கனடா வாழ் கிழக்கிலங்கையின் மைந்தன் விஸ்வலிங்கம் (விசு) அவர்கள் தனது நீண்டகால தொண்டர் சேவைக்காக ஒன்ராறியோ அரசின் “25 வருட நீண்டகால சேவைக்கான விருது” (25 Years Long Services Volunteer Award) வழங்கி கௌரவிக்கப்பெற்றார்.
உதவும் பொற் கரங்களின் (Helping Golden Hands [HGH])ஸ்தாபகரும் தலைவரும், கனடாவின் அதிவேக வளர்ச்சியில் முன்னணியில் திகழ்ந்துவரும் பிரம்ரன் (Brampton) மாநகரத்தின் அதி உயர் விருதான பிரம்ரன் குடியுரிமை தொண்டர் சேவைக்கான (Best Brampton Citizenship Award) விருதினை பெற்றுக்கொண்டவரும், மேலும் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் அவர்களின் மகத்தான தொண்டர் சேவைக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தாயக உறவுகளுக்காக பல்வேறு நலன்புரித் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருவதுடன் ஏராளமான தொண்டர் நிறுவனங்களின் உயர் பதவியில் இருந்து சமூக நலன்சார்ந்த நிதி சேகரிப்பு மற்றும் தொண்டர் சேவைகளை ஆற்றிவரும் உயர் திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை கனடா ஒன்ராறியோ மாகாணத்தின் (Ontario Government, Canada) அதி உயர் விருதான “இருபத்தைந்து வருட தொண்டர் சேவைக்கான விருது”, “25 Years Long Services Volunteer Award” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சிரேஷ்ர ஊடகவியலாளரும், எழுத்தாளருமான இலங்கேஸ்வரன் தருமலிங்கத்தின் பரிந்துரையின் பிரகாரம் இவ் உயரிய விருது விஸ்வலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொண்டர்கள் சமூகத்துக்கு ஆற்றிய தன்னார்வ சேவையின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதுதான் இந்த விருதின் நோக்கம் எனலாம்.
நேற்றைய தொண்டர் சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வில் முப்பதிற்கும் மேற்பட்ட தகுதியுடையவர்கள் அவர்களது கடின உழைப்பு மற்றும் நீண்ட கால தொண்டர் சேவையினை வழங்கியமைக்காக ஒன்ராறியோ மாகாண அரசின் சிறப்பு பிரிவினர் அவர்களை தெரிவு செய்து கெளரவம் செய்தனர். இன்றைய நிகழ்வில் Graham McGregor Member of Provincial Parliament of Ontario, Sylvia Jones-Deputy Premier of Ontario மற்றும் ஏராளமான சிறப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டு நிகழ்வினை எவ்வித தொய்வும் இன்றி நடத்தியமை சிறப்பானதாகும்.
புலம் பெயர்ந்து வாழும் கனேடிய மக்களின் மற்றும் தாயக மக்களின் நலப்பணித் திட்டத்தை ஒரு தொலைநோக்கு திட்டமாக சிறந்த குறிக்கோளுடன் பல தொண்டர் சேவை நிறுவனங்களுடன் குறிப்பாக கனேடிய மற்றும் தாயக தொண்டர் சேவை நிறுவனங்களின் சிறப்பு பிரதிநிதியாக விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துவருவது சிறப்பானதும் பாராட்டுதல்களுக்குரியதாகும்.
தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக கனடா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் ஏராளமான அகதிகளின் குடும்ப நலன் சார்ந்த பல்வேறுவகையான சமூக நலன் சார்ந்த குறிப்பாக குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், வளர்ப்பு, மற்றும் ஆதரவு
சமூகங்களை உருவாக்குதல், சமூக ஒருங்கிணைப்பு, கல்வி, ஆங்கில மொழியினை சரளமாக பேசுவதற்கும் எழுதுவதற்கும் தேவையான வசதிகளையும் இதனுடன் சார்ந்த நிதியுதவி வசதிகளை வழங்குவது ஆகியவற்றில் அவரது பணி பாராட்டத்தக்கது.
விஸ்வலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பெற்ற இந்த விருது “உதவும் பொற் கரங்களின் (Helping Golden Hands [HGH])” அனைத்து நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டர்கள் என அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஊக்கம் ஆகும். இதன் மூலம் இந்த பணிகளில் இன்னும் சிறந்த முறையில் சேவையை அதிகம் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என பல சிறப்பு பிரதிநிதிகள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து விஸ்வலிங்கத்தின் செயல்பாடுகளுக்கு தங்களது ஆதரவினையும் உதவிகளையும் தாராளமாக வழங்குவதாக நிகழ்வின் இறுதியில் உறுதிமொழி கூறி பாராட்டுதல்களை தெரிவித்தனர்.
இந்த உயர் விருதினை பெறுவதற்காக நூற்றுக்கும் மேலான பரிந்துரைகளும் சிபாரிசுகளுடன் சேர்ந்த விண்ணப்பங்கள் ஒன்ராறியோ மாகாண அரசினால் பெற்றுக்கொள்ளப்பட்டதாயினும் ஒரு சிலருக்கே அதி உயர் விருதான இருபத்தைந்து ஆண்டுகளை தொண்டர் மற்றும் தன்னார்வ சேவைகளில் முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உதவும் பொற் கரங்களின் (Helping Golden Hands [HGH]), இந்த அமைப்பு இத்தகைய சிறப்பை பெறுவதற்கு சமூக நோக்கின் அடிப்படையில் இதனை உருவாக்கிய விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் மனதார வாழ்த்துகின்றோம். .