நடராசா லோகதயாளன்
உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குறுந்தூர்மலை விடயத்தில் கட்டளை பிறப்பித்த காலம் முதல் தொடர் நெருக்கடிக்கு இலக்கான நீதிபதி, 2023-09-23 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.
நீதிச் சேவை ஆணைக் குழுவின் செயலாளருக்கு நீதிமன்ற கடித தலைப்பில் தனது பதவி விலகலை அறிவித்துள்ள நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு எதிராக அண்மையில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிபதி சரவணராஜா முல்லைத்தீவு குறுந்தூர்மலை தொடர்பில் பிறப்பித்த கட்டளைக்கு எதிராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உட்பட்ட இனவாதகள் நீதிபதியை மோசமாக விமர்சித்து கருத்துக்கள் வெளியிட்ட நிலையில் தற்போது நீதிபதி தனது பதவியை துறப்பதாக எழுதியுள்ளார்.
இதேநேரம் நீதிபதியின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழு ஏதும் கருத்து வெளியிடவில்லை.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ள நீதிபதி, நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை