கவிக்கு அப்துல் ரகுமான். சுதந்திரக்கவி சுப்பிரமணிய பாரதியை அறிமுகம் செய்யும் போது “எட்டயபுரத்திலே இரட்டைப் பிறவி. ஒன்று நீ! இன்னொன்று உன்னடைய தமிழ்”.. என்று பாரதியை வியந்து பாடுகின்றார்! அதே போன்று செப்டெம்பர் 10ம் நாள் ஞாயிறு மாலை College Ahunstic அரங்கில் செல்வன் துவாரகன். தபோதரன் அவர்களின் இரட்டை அரங்கேற்றம் அறிமுகமாகியது இது மொன்றியல் நகருக்குப் புதியது. இது வரை இங்குள்ள அரங்குகளிலே இரட்டை அரங்கேற்றம் இடம்பெறவில்லை. ஒன்றுவாய்ப்பாட்டு, இன்னொன்று தண்ணுமை வாத்தியம் (மிருதங்கம்).
இளங்கலைஞர் மன்றம் மிருதங்க சேஸ்த்திரம் பெருமையுடன் ஏற்பாடு செய்த துவாரகனின் அரங்கேற்றஇசை முழக்கம் அருள்திரு– திருமுருகன் கோயில் பிரதம சிவாச்சாரியார் சிறீ வெங்கடேஸ்வரக் குருக்கள், பூர்ணானந்த விசாகன் ஐயா இருவரினதும் ஆசிகளுடன் ஆரம்பமாகியது. துவாரகனின் குருவான “சங்கீதபூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் முன்னிலை வகிக்க கூடவே புகழ் பெற்ற இசைக் கலைஞர்களான வாசுதேவன்- ராஜலிங்கம் (மிருதங்கம்), வயலின் வாத்திய வித்தகி டாக்டர் சிறீமதி தனதேவி மித்ரதேவா, செல்வி தாரணி தபோதரன் (வயலின்), திரு.ரமணன் கிருஸ்ணராசா(கஞ்சிரா), கலையரசன், சிங்கராஜ்(கடம்) மோகனன் ரவீந்திரன்(மோர்சிங்)- செல்விகள் ரிந்திகா குமாரசாமி, கவிசியா. குமாரசாமி (தம்புரா) ஆகிய இசை வல்லுநர்கள் இணைந்து அரங்கேற்ற இசைநிகழ்வுகளை பிரமாதப்படுத்திவிட்டனர்.
நமது பாரம்பரிய இசைக்கோலங்கள் மரபுமாறாது,மரபுமீறாது,பயில்வதற்கு முன் வந்த நமது பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கூறி வரவேற்போம்.”தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என அப்பர் சுவாமிகள் பாடி வைத்தது போன்று நம்மண்ணில் இசைக்கலைஞர்கள் மிக வாஞ்சையுடன் புதியமாணவர்களை புலம்பெயர் மண்ணில் உருவாக்கி வருவதையும் அப்படிப் பயில வேண்டும் எனும் அவாவுடன் பயிலும் துவாரகன் போன்ற மாணவச் செல்வங்களை வாழ்த்தி வரவேற்போம். வாய்ப்பாட்டு, வாத்திய இசைக் கருவிகளை மீட்டல், பயிற்சி பெறுவதற்கு அகவுருப்பும், ஆண்டவன் அருளும்,எமக்கு வேண்டும். அதுவும் இசையோன் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணம் அறிந்தவராகவிளங்கவேண்டும் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் இதுபற்றி எழுதிவிபரிக்கும் அடிகளார்.
“யாழும்,குழலும்,சீரும்,மிடறும்,தாழ்துரல் தண்ணுமை,ஆடலோடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து வரிக்கும் ஆடற்கும் உரிப் பொருள் இயக்கத் தேசிகத் திருவின் ஓசை எல்லாம் ஆசின்றி உணர்ந்த அறிவினன் ஆகிக், கவியது குறிப்பும்,ஆடற்தொகுதியும், பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபின் இசை யோன் தானும்” என இலக்கணம் கூறுகிறார் இளங்கோவடிகள்.
அதாவது யாழிசையும், குழலிசையும், தாளக்கூறுப் பாடல்களும்,மிடற்றுப் பாடலும், தாழ்ந்தகுரல் எழுப்பும் தண்ணுமையும் (மிருதங்க வாத்தியம்) ஆகிய இவற்றால் இசைந்த இசையைக் கூடத்துக்கும் பொருந்துமாறு இசையுடன் இசைக்க வல்லான் ஆகவும், சொற்களின் ஓசையைச் சுத்தமாகக் கடைப் பிடிப்பவன், அந்தச் சொற்களின் ஓசை குறிக்கும் பொருள்களெல்லாம் குற்ற மறத் தெரிந்த அறிஞனாகவும், தான் அவ்வாறு கொண்ட உறுதியினின்றும், அசையாத இயல்பினை உடையவனாகவும், இசைப்புலவன் இருக்க வேண்டும் அத்தகைய ஒருவர்தான் எமது மண்ணின் இசைப்புலவன் சங்கீத பூசணம் பொன்.சுந்தரலிங்கம் ஐயா அவர்கள்.அவரும் அவருடன் இணைந்து வயலின் வித்தகி திருமதி தனதேவி மித்ரதேவா, தண்ணுமைக் கலைஞர் வாசுதேவன் ராஜலிங்கம், மற்றும் ஒன்றுகூடி வாசித்த இசைக் கலைஞர்களும், செல்வன் துவாரகனின் அரங்கேற்று காதையை அமர்க்களப்படுத்தி ஆனந்தம் கொள்ள வைத்துவிட்டனர்.
பிரதமவிருந்தினராக வருகை தந்து இரு அரங்கேற்றநிகழ்வுகளை மிகவும் இரசித்துக் கொண்டிருந்தவரான ஜி.ஆர்.எஸ்.மூர்த்தி அவர்கள் தனது உரையில்கூறியதாவது “இரட்டை அரங்கேற்ற நிகழ்வுகளாக தாளவாத்தியமும், மிருதங்கம், வாய்ப்பாட்டு, இராகங்களை அரங்கேற்றம் செய்வதற்கு இலகுவாக எவரும் நினைக்கமாட்டார்கள். கட்டுப்பாடு, ஒழுக்கம் நிறைந்த மாணவனான துவாரகனைப் பயிற்றுவித்த பெரும் புகழ் படைத்த மூத்த கலைஞரான திரு பொன் சுந்தரலிங்கம் ஐயாவும், மிருதங்க ஆசான் திரு.வாசுதேவன்.
ராஜலிங்கமும், அதேகட்டுப்பாடுடனும்,கடினபயிற்சியுடனும் பயிற்றுவித்து, இன்று இளங்கலைஞன்து வாரகனின் அரங்கேற்றம் காண்பதற்கு மிக உறுதுணையாக இருந்ததை மனப் பூர்வமாகப் பாராட்டி மகிழ்கின்றேன்” எனப் பாராட்டினார் . மேலும் துவாரகனின் குரல்வளத்தையும், மொழிவளத்தையும் எடுத்துக் கூறி சோர்வில்லாமல் தினசரி பயிற்சி செய்துவந்தால் துவாரகனின் எதிர்காலம் பிரகாசமாக விளங்கும் என்று அறிவுறுத்தியதையும் துவாரகன் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆங்கிலத்திலும்,பிரெஞ்சிலும் கல்வி கற்கும் துவாரகன் ஓய்வு கிடைக்கும் போது தமிழ் இசைப் பாடல்களைம் கீர்த்தனைகளையும் தவறாது பாடியும் பயிற்சியும் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். . உங்களுக்கு கலைவாணியின் அருள் மிகுந்துள்ளதால் அடையாளம் காணக் கூடிய குரல்வளம் உண்டு.வாய்ப்பாட்டுப் பயிற்சிகளை கடினமாகப் முயற்சி செய்தது தெரிகிறது.
உங்கள் ஞாபகசக்தி வளம் பெறுவகற்கு இது உதவும். இதுவரையும் நல்லதொரு கர்நாடக இளம் மாணவனை நான் அறிந்திருக்க வில்லை. இனிமேலும் நீங்கள் தான் மொன்றியல் சங்கீத இளவரசன். நல் வாழ்த்துகள். பாரதி ராஜாவின் “பதினாறு வயதினிலே” படத்தில் மயிலு (சிறீதேவி) அம்மா! நான் பாசாயிட்டேன்,பாசாயிட்டேன் எனக் கூவிக்கொண்டு வயல் வரம்பில் ஒடி வருவாள்! அதேபோல் நீங்களும் அம்மா! அப்பா! நான் அரங்கேற்றத்தில் டபிள் பாசாகி விட்டேன் என்று தைரியமாகக் கூறுங்கள்!.
வீணை மைந்தன் -கவிஞர் – எழுத்தாளர்