கதிரோட்டம் 29-09-2023 வெள்ளிக்கிழமை
பௌத்தமும் சிங்களமும் சேர்ந்து இலங்கைக்கு மீண்டும் ஒரு தடவை அவப்பெயரை தேடித்தந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் தொடக்கம் உலக அரசியல் மட்டத்தில் பேசுபொருளாக தோற்றம் பெற்றுள்;ளதை எமது தமிழினம் நெஞ்சம் குமுறுகின்றiயும் தாங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் கடந்து போவது போலவே மணித்தியாலங்கள் நகர்கின்றன.
இலங்கையில் தான் வகித்த நீதிபதி பதவியை உள்ளார்ந்தமாக நேசித்ததாகவும் அதன் காரணமாகவே நீதியை நிலை நாட்ட முனைந்தேன் என்று தனது சக சட்டவாதிகளோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு தனது பிடியில் இருந்து விலகாமல் இருந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அவர்களை தொடர்ச்சியாக சிங்கமும் பௌத்தமும் ஆட்சியின் பலத்தை கைகளில் எடுத்துக் கொண்டு எமது நீதியின் காவலனை கடந்த சில வாரங்களாக துரத்திய வண்ணம் இருந்திருக்க வேண்டும். அதிகாரங்கள் மிக்க பதவியில் அமர்ந்திருந்த அவரது நீதிக்கு சார்பான உத்தரவை அரசாங்கத்தின் ஏவல் நாயாகத் தெரியும் சட்டமா அதிபர் அலுவலகம் ரத்து செய்து விட்டு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பை வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்த இவ்வாறான கொடிய ஆணையைப் பிறப்பிக்க பௌத்தம் சிங்களம் ஆகிய இரண்டு பிசாசுகள் நெருக்குவாரத்தை வழங்கியிருக்கின்றன.
‘உங்களைப் போன்றவர்கள் தான் இந்த தேசத்திற்குத் தேவை” என்று ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் பாராட்டியிருக்க வேண்டிய இந்த நீதிகாத்த பெருமகனின் நேர்மையும் தோற்றுவிட்டதாக நாம் ஏங்குவதும் எமக்கு ஓரளவு புரிகின்றது அல்லவா?
உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள பதவியை இராஜினாமாச் செய்த நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார் என்பது தமக்கு அவமானத்தை தேடி தரக்கூடியன என்று கூட சிந்திக்காமல் இருக்கும் தேசத்தின் ஜனாதிபதியும் அமைச்சரவையும் எவ்வாறு எதிர்வரும் நாட்களில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைத் தருவார்கள் என்ற கேள்வி உலகெங்கும் காற்றோடு கலந்து உலக நாடுகளின் காதுகளை நோக்கி பயணித்துக் கொண்டிருகின்றது.
நீதியின் பக்கம் நின்று தீர்ப்பு வழங்கியதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக அவருக்கு பொலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அதற்கு மாறாக கொடிய புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக அவரைக் கண்காணித்துவந்துள்ளார்கள் என்பதை அறியும் போது எமது கண்களும் ஈரமாகின்றன. கடந்த சில வாரங்களாக நிம்மதி இழந்து தன் குடும்பத்தினரோடு எவ்வாறு அவர் தனது நாட்களை கழித்திருப்பார் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
“கடந்த சில நாட்களாக நான் சந்தித்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்” என்று அவர் எழுதி வைத்துள்ள வரிகள் இங்கையின் நீதிதுறையில் ஒரு ‘கறை படிந்த’ காலப்பகுதியின் சாட்சிகளாக விளங்கவுள்ளன என்பது நிச்சயமான உண்மையே!
இவரது நீதிக்கு சார்பான போராட்டம் இதற்கு முன்னரும் பல தளங்களில் ஆரம்பித்திருந்ததை நீதிபதி அவர்களின் சகாக்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் இருந்து நன்கு புலப்படுகின்றது. ஒரு அற்புதமான தமிழ் மகன் ஒருவரின் நீதி சார்ந்த கடமைகளில் தடங்கல்கள் தோன்றும் படலம் சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமானதை நாம் அறிவோம். முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் கள ஆய்வினை மேற்கொண்டிருந்த போது, குருந்தூர் மலையில் பௌத்த மதகுருமார்கள் வழிபாடுகளை மேற்கொண்ட சம்பவம் இதன் ஆரம்பப் புள்ளியாக விளங்கியது
இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட நீதிபதி உடனடியாக வழிபாடுகளை நிறுத்தக்கோரி பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். எனினும் அங்கு கூடியிருந்த பௌத்த பிக்குகள் நீதிபதி சரவணராஜா அவர்களோடு முரண்பட்டு வாக்குவாதம் செய்துள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் எதைச் சொன்னாலும் கணக்கில் எடுக்கப்போவதில்லை, தாங்கள் நினைப்பதைத்தான் செய்வோம் என்கின்ற செய்தியினைத்தான் அவர்களின் நடவடிக்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்கள் எனக் கண்டனம் வெளியிட்டனர்.
இந்த நீதிப் புறக்கணிப்பின் தொடர்ச்சியாக இலங்கைப் பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்துக்களை வெளியிடும் அளவிற்கு இலங்கையின் நீதித்துறையில் ஓட்டைகள்’ நிறைந்து காணப்படுகின்றன என்பது தெரிய வந்தது. பாராளுமன்றத்தில் இனவாதக் கோசமிட்ட அந்த பௌத்த வெறி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரை கட்டுப்படுத்த ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விரைந்து வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. நீதித்துறையின் உயர் விருது வழங்கப்பட வேண்டிய ஒரு நீதிபதியை இலங்கை அரசும் அதன் பாராளுமன்றமும் நாட்டை விட்டு துரத்தியுள்ளன. இவ்வாறான அந்த ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் காப்பாற்றுவோம் எனவே அடுத்த தேர்தலில் எம்மை ஆதரியுங்கள் என்று தமிழர்களின் வாக்குகளுக்காக எம்மிடம் இனிவரும் நாட்களில் வரவுள்ள எமது பிரதிநிதிகளுக்கு நாம் கதவடைப்பு செய்வோம்!