செப்ரெம்பர் 30 ஆம் நாளன்று, உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாள் மற்றும் தோடம்பழ நிற உடை நாள் ஆகிய இரண்டு விடயங்களையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இந்தக் குறிப்பிடத்தக்க நாள் குடியிருப்புப் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பாத குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துகிறது. அதே நேரத்தில் உயிர் பிழைத்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களை அங்கீகரிக்கிறது.
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாள் மற்றும் தோடம்பழ நிற சட்டை நாள் ஆகிய இரண்டையும் நினைவுகூரும் கனடியத் தமிழர் பேரவை, பாதிக்கப்பட்டவர்களுடன் ஒன்றிணைந்து நின்று கனடிய தேசத்தில் அது குறித்த அறிவையும், நல்லிணக்கத்துடன் கூடிய மீண்டெழுதலை, வளர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளது.
“முதற் குடிகள், மெற்றிஸ் மற்றும் இன்யூற் இனங்களை சேர்ந்த அறிஞர்களால் எமக்கு வழங்கப்படும் வரலாற்று உண்மைகளை நாம் தொடர்ச்சியாகக் கற்பதும், இழந்தவர்களை நினைவுகூருதலும் கனடாவின் பழங்குடி மக்களுடனான எமது நல்லிணக்கத்திற்கான ஒரு முக்கிய படியாகும்” என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் ரவீனா ராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளைக் கடைப்பிடிக்கும் வகையில், செப்ரெம்பர் 30 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு Curve Lake இன மக்களோடு இணைந்து பங்குகொள்வதில் கனடியத் தமிழர் பேரவை பெருமை கொள்கிறது.
இந்த அர்த்தமுள்ள சந்திப்பில் கலந்துகொள்ள அனைவரையும் கனடியத் தமிழர் பேரவை அழைக்கிறது. இந்த நிகழ்வில் கனதி படைத்த கதைகள் கூறப்படும். சிந்தனையை மேம்படுத்தும் நடைப்பயணம் உண்டு. இறுதியாக மதிய உணவுடன் நிகழ்வு முடிவடையும்.
ஆதிக்குடிகள் குறித்த உண்மை, நல்லிணக்கம் மற்றும் வரலாற்றை ஞாபகமூட்டல் ஆகியவற்றிற்கான நமது அர்ப்பணிப்பில் நாம் அனைவரும் ஒன்றுபடவும், உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், ஒற்றுமையை எடுத்துக் காட்டவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மேலதிக தகவல்களுக்கு, info@canadiantamilcongress.ca என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 416-240-0078 என்ற தொலைபேசி மூலமாகவோ கனடியத் தமிழர் பேரவையைத் தொடர்பு கொள்ளவும்.