வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு செல்வா அன்று கோரினார். இன்று சிங்கள மக்கள் தம்மைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் மன்றாடுகின்றனர்.
- வின்சன் சர்ச்சில் ‘புள்ளடியால்’ தோற்றார். ராஜபக்ஷக்களை மக்கள் எழுச்சி தோற்கடித்தது.
இனம் சமூகம் என்ற அடிப்படையில் இலங்கை கடந்த 75 வருடங்களாக பிளவுண்டு கிடக்கின்றது.இந்தப் பிளவுகளை ஒட்ட வைக்க அரசியல் சமூக ரீதியில் எந்தவித வழி முறைகளும் ஆக்கபூர்வமாக மேற் கொள்ளப்படவில்லை. அத்தி பூத்தாற்போல் இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் உறவுப் பாலங்கள் அமைக்க முயற்சிகள் காலத்துக்குக் காலம் மேற் கொள்ளப்பட்ட போதும். அத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளிவிடும் செயற்பாட்டாளர்களின் செயல்கள் வெற்றி பெற்று விடுகின்றன.இதனையும் மீறி மேற்கொள்ளப்படும் செயல்கள் சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத் துர்வுவதற்கான செயற்பாடுகளாக அமைந்துவிடுகின்றன.
இதற்கும் அப்பால் காலத்துக்குக் காலம் ஆட்சி பீடம் ஏறும் அரசியல் சக்திகளின் தாரக மந்திரமாக உச்சரிக்கப்படும் இன சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் உறவு என்பன உயிரற்ற பொம்மைகளாகவே காட்சிப்படுத்தலில் பிரசன்னமாகி வருகின்றன.எனவே இலங்கையில் இனங்களுக்கிடையில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் பரஸ்பர உறவு என்பன இன்று ஒட்டு மொத்தமாக ‘காணாமல் ஆக்கப்படும்‘ ஆளும் வர்க்கத்தின் பட்டியலில் நிரந்தரமாக இடம்பிடித்துவிட்டது.
இந்த ஒரு பின்னணியில் இருவேறு எதிhத் திசைகளில் பயணிக்கும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் தற்போது தமக்கான தலைமைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பலம் பெற்றிருந்த காலத்தில் தமிழர்களுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் சிங்கள மக்களிடையே எழுந்த போது ஆட்சியாளர்கள் ஒஸ்லோ உடன்படிக்கை மூலம் அதிகாரப் பகிர்வில் சமஷ:டிக்குக் கீழ் இறங்கி வந்தனர். ஆனால் 2009 ஆம் ஆண்டு கிளிநொச்சி இலங்கைப் படைத் தரப்பின் கைகளுக்கு வந்தபோது ஒஸ்லொ உடன்படிக்கை அதிகாரப் பகிர்வு என்ற விடயங்களைத் தென்னிலங்கை தூக்கி வீசியதுடன் தமிழர்களுக்கென விசேட பிரச்சனைகள் இல்லை தென்னிலங்கை மக்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான பிரச்சனைகளே உள்ளன என்ற வாதங்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டு பேசு பொருளாகியது.
ஆனால் தமிழர்கள் தென்னிலங்கையின் இந்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போக மறுத்ததுடன் தமக்கான ‘தலைவரைத்‘ தேடியதுடன் தமிழ் மக்களிடையே இருந்த தலைமைகளை தமது எதிர்ப்பின் தற்காலிக குறியீடாக தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெறச் செய்தனர். இந்த வெற்றிகளுக்குள் தமிழர்களுக்கென உண்மையான நேர்மையான தலைமை கட்டி எழுப்பப்படலாம் என்ற நப்பாசை மாத்திரமல்ல வேறு தெரிவு என்பது தமிழர் தாயகத்தில் இல்லாதிருந்ததையும் தமிழ் மக்கள் உணர்ந்ததன் வெளிப்பாடே ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாக மக்களின் இந்த தெரிவுகள் இருந்தன.
ஆனால் இந்த வெற்றிகள் விழலுக்கிறைத்த நீராகப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்த தமிழ் மக்கள் தற்போது தமக்கான தமது ‘தலைவரைத்‘; தேடிக் கொண்டிருக்கின்றனர்.
மறுபுறம் தென்னிலங்கையும் தமக்கான தலைவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. இதில் விசித்திரம் என்னவெனில் அரகலயாக்களின் எழுச்சியுடன் சிங்கப்பூரின் சிற்பியான லி குவான் யூ போன்ற தலைவரே தமக்குத் தேவை என குரல் எழுப்பிய தென்னிலங்கை தற்போது ‘எங்களுக்கு ஒரு காந்தியைத் தந்தருளும்‘ என கடவுளிடம் மன்றாடி நிற்கின்றது.
சுதந்திர இலங்கையில் கடந்த 75 வருட கால வரலாற்றில் தமிழர்கள் தமது அரசியல் அபிலாiஷகளை அடைந்து கொள்ள கையில் எடுத்த ஆயுதம் அகிம்சையாகும். ஆனால் இந்த அகிம்சை மொழியை தென்னிலங்கை அரசியல் சக்திகள் கேலிக்கள்ளாக்கியதுடன் அரச பயங்கரவாதம் மற்றும் அரசியல் சக்திகளின் காடைத்தனத்தாலும் பதிலளித்தன. அந்த வரலாறு இன்று வரை அதாவது மகாத்மா காந்திக்குப் பின் அஹிம்சைக்கு உயிர் கொடுத்த திலீபனின் ஊர்தியைத் தாக்கும் வரை தொடர்கின்றது. இவ்வாறு வரலாற்று ரீதியில் அகிம்சையை காலில் போட்டு மிதித்த தென்னிலங்கை பரம்பரை இன்று கடவுளிடம் ‘எங்களுக்கு ஒரு காந்தியைக் தந்தருளும்‘ என இறைவனிடம் மன்றாடி நிற்கின்றது.
சிங்கள ஆளும் வர்க்கம் தமது அரசியல் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிய ‘அரகலய‘ எழுச்சியை அடக்க ரணில்விக்ரமசிங்கவுடன் கைகோர்த்த ராஜபக்ஷ அணியினரின் வெற்றிக்குள் அமிழ்ந்து போன தென்னிலங்கை தமது மீட்சிக்கு காந்தி மகானைத் தருமாறு இறைவனிடம் மன்றாடும் நிலைக்குத் தென்னிலங்கையை தள்ளியுள்ளது. இத்தகைய கையறு நிலையே தென்னிலங்கை ஊடகங்களில் ஆசிரியர் தலையங்கமாக வெளிப்பட்டுள்ளது.
ஏனெனில் இன்னொரு ‘அரகலய‘ எழுச்சி ஏற்படும்;. அந்த எழுச்சி தென்னிலங்கைக்கு மீட்சியைத் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தென்னிலங்கை மக்களுக்கு ரணில் – ராஜபக்ஷ அணியினரின் நகர்வுகள் பலத்த அடியைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஒரு ‘அரகலய‘ எழச்சிக்கு இடமில்லை என்ற யதார்த்தத்தை ரணில் – ராஜபக்ஷ அணியினரின் நகர்வுகள் உணர்த்தியதன் விளைவே தென்னிலங்கையை ‘எங்களுக்கு ஒரு காந்தியைத் தந்தருளும்‘ என்று இறைவனிடம் மன்றாட வைத்துள்ளது என்று கூறுவதே பொருந்தும்.
மகாத்மா காந்தி; அடுத்த தேர்தலுக்காக அன்றி அடுத்த தலைமுறைக்காக உழைத்தவர். எனவேதான் மகாத்மா காந்தியின் நினைவுகள் இன்றுவரை வாழ்கின்றது என்று சம்பிக்க முனிதாச என்பவர் ஆங்கில நாளிதழில் தமது கருத்தாகப் பதிவிட்டுள்ளார்.
இன்றைய அரசியல்வாதிகள்இ குறிப்பாக இங்குள்ளவர்கள்இ இதற்கு நேர்மாறாகச் செய்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும்இ அவர்கள் அளித்த வாக்குறுதிகள் என்ன என்பதை அவர்கள் முற்றிலும் மறந்துவிடுகிறார்கள்இ மேலும் இயற்கை பேரழிவுகளுக்கும் ஏன் அனைத்து குறைபாடுகளுக்கும் பொதுமக்களே காரணம் என்று குற்றம் சுமத்தும் அளவுக்கு அரசியல்வாதிகள் சென்றுவிடுகின்றனர் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அதிகாரம் இருக்கும் போது அரசியல்வாதிகளுக்கு மூளை பறி போய்விடும்.எதிர்கட்சியில் இருக்கும் போது அரசியல்வாதிகளுக்கு எல்லா மூளையும் இருக்கிறது. ஆனால் அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இது நமது அரசியல் வட்டாரத்தில் கசப்பான உண்மை என்றும் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் இன்றைய மிக முக்கியமான தேவைகளில் ஒன்றுஇ நமது நாட்டிற்கு தலைமைத்துவத்தை அல்லது வழிகாட்டலை வழங்குவதற்கு மகாத்மா காந்தி போன்று திறமையான ஒரு அரசியல்வாதி தோற்றம் பெற வேண்டும் என தென்னிலங்கை இன்று எதிர் பார்க்கின்றது.
உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பேரரசுகளில் ஒன்றான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
பிரிட்டிஷ் போர்க்கால பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மகாத்மா காந்தியை ‘அரை நிர்வாண பக்கிரி‘ என்று குறிப்பிட்டு அவரை இழிவுபடுத்தினார்.
அரசியல் தலைவர்கள் மத்தியில், வின்ஸ்டன் சர்ச்சில் வகித்த போர்க்கால தலைமைக்காக பரவலாக போற்றப்பட்டவர். ஆனால் போரைத்தொடர்ந்து நடந்தபொதுத் தேர்தலில் அவர்தோற்கடிக்கப்பட்டார் என்று ஆங்கில நாளிதழ் தனது அசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனின் போர்க்கால பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மக்களின புள்ளடியால் தோற்கடிக்கப்பட்டார். அனால் இலங்கையில் ‘அரகலயா‘ என்ற மக்கள் எழச்சி போர்க் கால தலைமைகளைத் தூக்கி வீசினர்.
‘அகிம்சை என்பது மக்களின் வசம் உள்ள மிகப்பெரிய சக்தி. மனிதர்களின் புத்திசாலித்தனத்தால் உருவாக்கப்பட்ட அழிவுகரமான ஆயுதத்தை விட இது வலிமையானது.’ என்பதை தென்னிலங்கை மக்களுக்கு அந்த ஆசிரியர் தலையங்கம் சுட்டிக் காட்டுகின்றது.
தென்னிலங்கையின் இந்த மன நிலை இன்னொரு அரகலய எழுச்சி இன்றைய ரணில் – ராஜபக்ஷக்களின் கூட்டாட்சியில் சாத்தியமாவது கடினம். மகாத்மா காந்தி போன்ற ஒரு தலைவரின் வழி காட்டலில் உருவாகும் அகிம்சை வழி போராட்டமே தென்னிலங்கை மக்களுக்கு விடிவையும் விமோசனத்தையும் தரும் என்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது.
பிரெட் என்ற பொது மகன் கடவுளுக்காக காத்திருக்காமல்,அடுத்த தேர்தலில் அதை நீங்களே செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல தென்னிலங்கையும் தமது ஒட்டு மொத்த தலைமைகளில் நம்பிக்கை இழந்து தமக்கான தலைமைத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் தமிழ்த் தலைமைத்துவங்களும் தென்னிலங்கை சிங்களத் தலைமைகளும் வேறு விதமான சிந்தனைகளுக்குள் மூழ்கி தமக்கான அரசியல் கனவில் சுகம் காண்கின்றனர்.
தமிழ் மக்களின் மன நிலை அறியாது தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுத்துவிட தீவிரமாகக் களத்தில் போராடி வருகின்றனர். ஆனால் இந்தத் தலைமைகள் எவருமே தமிழ் மக்கள் இன்று தேடும் ‘தலைவர்‘ அல்ல என்பதை உணர மறுக்கின்றனர். அத்துடன் இவர்கள் அனைவருமே அடுத்த தேர்தலுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டி கிரீடக் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். 2009 க்குப் பின் ‘வெறும் கையுடன் முழம் போடும்‘ தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் மனதில் தாமே இருக்கின்றோம் மக்களின் தெரிவு தாமே என்ற மிதப்பில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் அரசியல்வாதிகளைப் போன்றே தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் அடுத்த தேர்தல் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
ரணில் – ராஜபக்ஷக்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர காந்திய வழியிலான பாரிய அகிம்சை வழிப் போராட்டத்தைக் கட்டி எழப்புவது குறித்த சிந்தனையில் தென்னிலங்கை மூழ்கிக் கிடக்கின்றது. ஆனால் இன்னொரு ‘அரகலயா அலை‘ வரும் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அந்த மாற்றத்தில் ஆட்சிக் கிரீடத்தை மக்கள் தமக்கே வழங்குவர் என்ற நப்பாசையில் ஆளுக்கு ஒரு மூலையில் நின்று மனப் பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.
‘அரகலயா‘ எழுச்சியின் போது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது மாத்திரமல்ல ‘அரகலயாக்களை‘ ரணில் – ராஜபக்ஷக்களின் இரும்புக் கரத்தில் சிக்க வைத்தனர். ‘அரகலயா எழச்சி‘ போன்றதொரு இன்னொரு எழச்சிக்கு மக்களை அணி திரட்டி செல்ல திராணியற்ற இந்தத் தலைமைகள் தமது அரசியல் நலன்களுக்காக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இன்னொரு ‘அரகலயா‘ எழுச்சிக்காகக் காத்திருக்கின்றனர்.
மொத்தத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் பிரிந்த நின்று தமக்கான தலைமைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் தமக்கான ‘தலைவரைத்‘ தேட தென்னிலங்கை தமக்கு காந்தி மகானை தமக்குத் தந்தருளுமாறு இறைவனிடம் இறைஞ்சி நிற்கின்றனர்.
தமிழ் மக்களின் தெரிவாக இன்றைய தமிழ்த் தலைமைகளில் எவரும் இல்லை எனபதினாலேயே அவர்கள் ‘தலைவரைத்‘; தேடுகின்றனர்.
அதேபோல் தென்னிலங்கையின் தெரிவில் தற்போதைய எந்த அரசியல் தலைமையும் இடம்பெற முடியவில்லை என்பதினாலேயே அவர்கள் காந்தி மகானை தருமாறு இறுதியில் கடவுளிடம் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.
மொத்தத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி உணவுப் பற்றாக் குறை மருந்து தட்டுப்பாடு என மக்களின் பஞ்ச வாழ்க்கைக்குள் மக்களும் நாடும் தலைவர்களுக்கான பஞ்சத்தையும் எதிர் நோக்கியுள்ளனர்.
சிங்கள பேரினவாத சக்திகளிடம் இருந்து தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென தந்தை செல்வா அன்று கூறினார். தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் சக்திகளுடன் கூட்டணி வைத்துப் பயணித்த சிங்கள மக்களும்; தம்மைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் மன்றாட வேண்டிய நிலைக்கு அவர்களை வரலாறு இன்று கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.