மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் அருகில் மோகன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நாட்டு வெடிகள், வாணவெடிகள் உள்ளிட்ட வெடி வகைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு சுப துக்க நிகழ்ச்சிகளுக்கும், தீபாவளி பண்டிகையின்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று (அக் 4) மதியம் இந்த வெடி குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டது.
இந்த விபத்தில் வெடி தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். உடலின் பாகங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவுக்கு தூக்கி வீசப்பட்டன.
வெடி குடோனுக்கு அருகில் உள்ள வீடுகளிலும் புகை சூழ்ந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொறையாறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை அணைத்தனர். பொறையாறு போலீஸார் விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.