கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2023, 2024 பெரும்போகத்தில் வறட்சி, வெள்ளம், காட்டுயானை தாக்கத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கே குறித்த நஷ்டஈடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபையின் உதவிப்பணிப்பாளர் (பதில்) P.பூரணச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் 2023, 2024 காலப்பகுதியில் 71947 ஏக்கரில் காலபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
1215 ஏக்கர் நிலப்பரப்புக்கு 584விவசாயிகளுக்கு வெள்ளம் ,வறட்சி, காட்டு யானைகளின் தாக்கத்திற்காக 127850473ரூபா நஷ்ட ஈடாக கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை விவசாய அமைச்சர் கிளிநொச்சி வருகின்ற போது சம்பிரதாயபூர்வமாக விவசாயிகளுக்கு வழங்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களது வங்கிக்கணக்கில் வைப்பில் இடப்படும் என தெரிவித்தார்.கமநல காப்புறுதி சபையின் இவ்வாறான நன்மைகளை விவசாயிகள் அடைவதற்கு அனைத்து விவசாயிகளும் தங்களின் பயிர்களுக்கு காப்புறுதி செய்வதுடன் தமது கால்நடைகளுக்கான காப்புறுதிகளையும் மேற்கொள்ள முடியும்.
விவசாயிகளுக்கான ஓய்வூதிய காப்புறுதியை பெருமளவு விவசாயிகள் பயன்படுத்துவதில்லை எனவும் இவை விவசாயிகளின் இறுதி நேரத்தில் பிரயோசன படுத்தும் எனவே விவசாய ஓய்வூதிய காப்புறுதியையும் விவசாயிகள் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.