நடராசா லோகதயாளன்
இலங்கையில் மனித கடத்தல் தொடர்பிலான பல வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள 39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் எனப்படுபவர், இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் பெங்களூர் பிரிவினர் தொடர்ந்து இவரை கண்காணித்துவந்த பின்புலத்திலேயே இந்த வாரம் அவர் தமிழகத்தில் கைதுசெய்துள்ளனர்.
39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் 2021ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கையைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் இவர் தலைமறைவாக வாழ்ந்துவந்த நிலையிலேயே இவரை கண்காணித்துவந்த தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் தேசிய புலனாய்வு பிரிவு பல மாதங்களாக ஹாஜா நஜர்பீடனின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளது. சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட விடயங்களில் இவர் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.
இவர் தமிழகத்தின் இராமநாதபுரத்திலும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இலங்கை பிரஜைகள் குழுவொன்று இந்தியா வந்து, உரிய ஆவணங்களின்றி கர்நாடகாவின் மங்களூரில் வசித்து வருவதை பொலிஸார் கண்டறிந்த பின்னரே இவர்களது பின்புலத்தில் உள்ளவர்கள் தொடர்பிலான விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் மங்களூரில் 38 இலங்கை பிரஜைகளை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தப்பிச்செல்லும் குற்றவாளிகள் தமிழ்நாடு வழியாக பெங்களூர் சென்று அங்கிருந்து மங்களூருக்கு செல்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள மனித கடத்தல்காரர் ஹாஜா நஜர்பீடனிடம் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
குறிப்பாக கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடல் மூலம் செல்லும் நோக்கில், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இடைத்தரகர்கள் மூலம் பெருந்தொகையான பணத்தை கொடுத்து, ஆபத்தான பயணத்தை முன்னெடுக்கின்றனர் என்று இந்தியா மற்றும் இலங்கை பொலிசார் தொடர்ந்து கூறி எச்சரிக்கின்றனர்.
ஆனாலும், சிறு சிறு குழுக்களாக அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி, படகு மூலம் தமிழகம் வந்து அங்கிருந்து உள்ளூர் தரகரின் ஏற்பாட்டில் பல இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். பின்னர் ஒரு படகில் பயணிக்கும் அளவிற்கு ஆட்கள் சேர்ந்தவுடன், வெவ்வேறு நகரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, கேரளா அல்லது கர்நாடகா கடற்கரை பகுதிகளிலிருந்து படகு மூலம் அனுப்பிவைக்கப்படுவதாக புலனாய்வு அமைப்பு கூறுகிறது.
அதேவேளை, அப்படிச் செல்பவர்களின் படகுகள் பலவேளைகளில் நடுக்கடலில் பழுதடைந்து, ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் பன்னாட்டு கடற்படையினரால் மீட்கப்படுகின்றனர்.
பல நாடுகள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு தமது நாட்டிற்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தாலும், இப்படியான ஆபத்துக்களை அறிந்தும் தொடர்ந்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்கடத்தல் கும்பல்களில் சிக்கி ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறத