சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்களின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31-10-2023 அன்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார்.
இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது. இதற்கு மாணவர்களினால் சொல்லப்பட்ட காரணம் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் தென்னிலங்கையில் ஒரு நிகழ்ச்சியிலே பேசும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பாசிஸ அமைப்பு என விபரித்தமையே ஆகும்.
ஒருவர் வெளியிட்ட தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையில் பதிவிடுகிறது.
மாணவர்களின் நெருக்குவாரத்துக்குப் பல்கலைக்கழக நிருவாகம் பணிந்து சென்றமையும் ஒரு தவறான செயலாகும். எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெறாது இருப்பதனை மாணவர்களும், நிருவாகமும் உறுதி செய்வது அவசியம்.
பல்கலைக்கழகம் என்பது அறிவுசார் கருத்துப் பரிமாற்றங்களுக்குரிய ஒரு களம். வெவ்வேறு பட்ட அரசியல், பொருளாதார நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் எந்தத் தடைகளும் இல்லாத வகையிலே உரையாடுவதற்கும், விவாதிப்பதற்கும் உரிய வெளியும், சுதந்திரமும் பல்கலைக்கழகத்தினுள் இருப்பது பல்கலைக்கழகத்தின் அறிவு சார் செயன்முறைகளுக்கு மிகவும் அவசியம்.
இலங்கை அரசினதும், அதனது இராணுவக் கட்டமைப்பினதும் கடுமையான கண்காணிப்புக்கும், கட்டுப்படுத்தல்களுக்கும் உள்ளாகி இருக்கும் எமது பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தமது அரசியற் கருத்துக்களை சுயாதீனமாக முன்வைப்பதற்கும், நினைவேந்தற் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், போராட்டங்களிலே ஈடுபடுவதற்கும் எதிராகப் பல தடைகள் ஏற்படுத்தப்படுவதனை நாம் அறிவோம்.
இதன் மிக அண்மைய வடிவத்தினை இந்த வாரம் மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திலே ஜனநாயக ரீதியாகப் போராடிய எமது பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திலே நாம் கண்டோம்.
அரசினாலும், இராணுவத்தினாலும் அச்சுறுத்தலினையும், கட்டுப்படுத்தலினையும் எதிர்நோக்கும் எமது பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினைச் சேர்ந்த ஒரு பிரிவினரே, சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் பங்கேற்க இருந்த நிகழ்வு தொடர்பிலே ஒரு கட்டுப்படுத்தற் செயன்முறையில் ஈடுபட்டமை எமக்கு மிகுந்த ஏமாற்றத்தினையும், நம்பிக்கையீனத்தினையும், கவலையினையும் அளிக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணத்தினை ஏற்படுத்திவிடுமோ என நாம் அச்சமடைகிறோம் என்றுள்ளது.