டில்லியில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 2 வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு முன்னர் காற்று மாசு ஓரளவு குறைந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசால் மீண்டும் காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதையும் மூடு பனி ஆக்கிரமித்து இருப்பது போல் காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
புறநகர் பகுதிகளில் இருந்து காற்று மாசு டில்லியின் மைய பகுதியிலும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி அதிகளவிலான பட்டாசு வெடித்ததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாகும் என கூறப்படுகிறது. வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். எல்லையில் சோதனை நடத்தினார்.