1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில் தனது 50ம் ஆண்டில் கால்பதிக்கும் உன்னத இயக்கமாகவும் மேலும் உலகின் பல நாடுகளிலும் தலைமைகத்தின் அங்கீகாரத்தோடு கிளைகளைக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் உத்தியோகபூர்வமான பதிவுகளோடு கனடாவில் இயங்கிவருவதை உலகெங்கும் பரந்து வாழும் கல்வியாளர்களும் அரசியல் தலைவர்களும் தமிழர் பண்பாட்டை அதன் மேமையையும் வளர்ச்சியையும் நேசிக்கும் ஆயிரக்கணக்கானவர்களும் நன்கு அறிவார்கள். கடந்த பல ஆண்டுகளாக கனடிய மத்திய அரசின் அமைச்சகம் ஒன்றினால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பெற்று தொடர்ச்சியாக உலகின் பல நாடுகளிலும் பண்பாட்டு மாநாடுகளை நடத்திய பெருமையும் மகத்துவமும் கனடாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அதன் செயற்குழுவிற்கு மட்டுமே உரியது என்பதையும் பலரும் அறிவார்கள்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் கனடாவில் இயங்கிவருகின்றது. இந்த நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இயக்கத்திற்கான உத்தியோகபூர்வ பதிவு கனடிய மத்திய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பெற்றுள்ளது. தலைமையக செயற்பாட்டுக்குழுவின் தலைவராக கனடாவாழ் வினாசித்தம்பி துரைராஜா அவர்களும் செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களும் வடஅமெரிக்க நாடுகளுக்கான சிரேஸ்ட உப தலைவராக கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களும் அகிலக் கிளைகளின் ஒருங்கிணைப்பாளர் ஜேர்மனி வாழ் இ. ராஜசூரியர் அவர்களும் கொள்கை பரப்புச் செயலாளராக கனடா வாழ் நடா ராஜ்குமார் அவர்களும் நிர்வாகச் செயலாளராக ஜேர்மனி வாழ் கிரேஷன் ஜேம்ஸ்ரன் அவர்களும் அனைத்துலக ஊடகப் பொறுப்பாளராக கனடா வாழ் லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு பக்கபலமாக உலகின் பல நாடுகளிலும் இயங்கிவரும் கிளைகளின் நிர்வாகக் குழுவினர் தொடர்ச்சியாக எமது இயக்கத்தின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் விசுவாசமாக பணியாற்றி வருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளைத் தலைராக உலகெங்கும் நன்கு அறியப்பெற்ற கவிஞர் பெருமகனும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர். காலஞ்சென்ற கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் பொற்கிழி வழங்கிக் கௌரவிக்கப் பெற்றவருமான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் தலைவராக இருந்து இயக்கத்தின் பெருமைதனை காத்து வருகின்றார்.
இவ்வாறான மதிப்புறும் நிலையில் நேர்த்தியான முறையில் இயங்கிவரும் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சட்ட விதிகளுக்கு முரணான வகையிலும் உண்மையான விடயங்களை மூடி மறைத்தும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் வெளிநாடுகள் சிலவற்றிலும் உள்ள ‘குழப்பவாதிகள்’ சிலர் ஒன்று சேர்ந்து ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மலேசியா கிளை என்ற பெயரில் சிறிய கூட்டங்களை ஆங்காங்கே நடத்தி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும் கனடிய அரசின் சட்டங்களுக்கு எதிராகவும் அத்துடன் தமிழ் நாட்டு மக்களையும் அங்குள்ள அறிஞர் பெருமக்களை ஏமாற்றும் வகையில் நடந்து கொள்கின்றார்கள் என்பதை தமிழ் நாட்டில் வாழும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அபிமானிகளும் ஆதரவாளர்களும் அறிஞர் பெருமக்களும் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
எனவே மேற்படி ‘குழப்பவாதிகளுக்கு’ எதிராகவும் அதேவேளை மீண்டும் ஒரு தடவை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு வழங்கப்பெற்ற கனடிய அரசின் அங்கீகாரத்தையும் இயக்கத்தின் நெறிகளையும் பாதுகாக்கும் வகையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளார்கள். இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத் தொடர்புகள் கனடிய மத்திய அரசோடும் கனடாவிலும் தமிழ் நாட்டிலும் உள்ள சட்டவாதிகளோடு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது