முதலாவது கண்காட்சி ஒக்டோபர் 20, 21 ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியிலும், இரண்டாவது கண்காட்சி ஒக்டோபர் 22, 23ஆம் திகதிகளில் பருத்தித்துறை
ஹாட்லி கல்லூரியிலும், மூன்றாவது கண்காட்சி ஒக்டோபர்
27, 28ஆம் திகதிகளில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்திலும், நான்காவது கண்காட்சி நவம்பர் 18, 19ஆம் திகதிகளில் மட்டக்களப்பு YMCA மண்டபத்திலும், ஐந்தாவது கண்காட்சி ஹட்டன் நகரசபை மண்டபத்திலும் முறையே நவம்பர் 24ஆம் 25ஆம் திகதியும் இடம்பெற்றது.
மலையக மக்களின் வலியும் வாழ்வும் என்ற கருப்பொருளை உள்ளடக்கிய ஓவியம், சிறுகதை கட்டுரை, என ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே, முதலாவது பரிசு ரூபாய் 50000, இரண்டாவது பரிசு ரூபாய் 30000. மூன்றாவது பரிசு ரூபாய் 20000 (ஓவியம் இருவருக்கு) என்றும் ஆறுதல் பரிசாக 10 போட்டியாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயம் வழங்கப்பட்டது இப்படி ஒரு பெரும் தொகையை மலையக எழுத்துலகத்தில் மட்டுமல்ல இலங்கையில் சிறுகதை, ஓவிய, கட்டுரை போட்டிகளில் வழங்கப்படவில்லை விம்பம் லண்டன் இப்பெரும் தொகைப் பணத்தை எமது மலையகத்தில் திறமை மிக்கோரின் கைகளுக்குப் போய் சேர அரும்படுபட்டுழைத்தது எனலாம்.
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் முடிகிறது. இருந்தும் அவர்கள் பட்ட வலியும் வடுவும் மாறாமல் இருப்பதை காட்சிப்படுத்தப்பட்ட ஒவியங்கள் பெரும் சாட்சியானது. இவ் ஓவியக் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. .போட்டிக்கு வந்த பெரும்பாலான ஓவியங்களை விட்டு யாராலும் நகர முடியாதவாறு தத்ரூபமாக இருந்தது. மலையக மக்கள் இம்மண்ணுக்கு வந்து, காட்டை வெட்டி நாட்டை உருவாக்கினார்கள். இன்று இந்த நிமிடம் வரை மலையக மக்கள் இந்த தேசத்தின் நலனுக்காக பாடுபடுகிறார்கள். அவர்களின் நலனுக்கு யார் பாடுபடுகிறார்கள் என்றால் அது விடையில்லாத கேள்விக்குறிதான். அவர்களுக்கான சொந்த நிலம், வீடு, சுகாதாரம், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புகள் ஏன் சரிவிகிதமான உணவு கூட மறுக்கப்பட்டும் கிடைக்காமலும் இருக்கும் மக்கள் கூட்டம் அவர்தம் வாழ்வியலை இங்கு காட்சிப்படுதப்பட்ட ஓவியங்கள் பேசியன, கட்டுரைகள் பேசின, சிறகதைகள் பேசின,
அவர்களை ஊக்கப்படுத்த லண்டனில் இருக்கும் Ratnam Foundation அமைப்புடன், ஆதிரை, எழுநா போன்ற பதிப்பகத்தாருடன் மானுட நிறுவனமும் கைகொடுத்திருக்கிறது.
மலையகத்தின் எல்லா பகுதிகளிலும் இருந்து வந்த பார்வையாளர்களும், போட்டியாளர்களும் பரிசில்களை பெற்றவர்களும் மிகவும் சந்தோமாக இருந்ததைக் காணக்கிடைத்தது.
மிகத் தொலைவிலிருந்து மிக அருகில் உணரவைத்துள்ள
விம்பத்தின் அன்பும் உழைப்பும் மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
ஓவியங்கள் பேசிக்கொண்டேயிருக்கும்
கண்டு சென்றவர்களின் வழியெங்கும்…
வாழ்வெங்கும்…
– வி. எஸ்தர், ஹட்டன்