நடராசா லோகதயாளன்
இலங்கையில் புதிதாக உருவாக்கப்படும் சட்டத் திருத்ததின் மூலம் மீனவர்களிற்கு நவீன தொழில் நுட்பத்தை புகுத்துவதாக இலங்கை அரசு தெரிவித்தாலும் இது தொடர்பில் மீனவர்களிற்கும் தெரியாது அதற்கான நிதி வழங்குநர்களிற்கும் தெரியாது என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
கொழும்பில் உள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த விடயம் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளது.
வடக்கின் 10 மீனவ பிரதிநிதிகள் மற்றும் அகிலன் கதிர்காமர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இச்சந்திப்பில், இலங்கையில் தற்போதுள்ள 96 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க சட்டத்திற்குப் பதிலாக ஓர் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது. இது கடல் தொழிலாளரின் இருப்பை பாதிக்கும் விடயமாகவே அமைந்துள்ளது என்று எடுத்துக்கூறப்பட்டது.
இதேபோன்று காலநிலை மாற்றங்களினால் சிறு கடல்தொழிலாளரின் வாழ்வாதாரம் பாதிப்பதனால்- காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகள் செயல்பாடுகளில் மீனவர்களுடனும் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
புதிய சட்ட திருத்ததில் மீனவர்களிற்கு நவீன தொழில் நுட்பத்தை புகுத்துவதாக இலங்கை அரசு தெரிவித்தாலும் இந்த விடயம் அதனால் நேரடியாக பாதிக்கப்படக் கூடிய மீனவர்களுக்கோ அல்லது அந்த தொழில்நுட்பத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல நிதி உதவி செய்பவர்களுக்கோ தெரியாது என்பதும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்காரணமாக புதிய சட்டத்தை ஆராய்ந்து அதன் பாதிப்பை இலங்கை அரசிடம் எடுத்துரைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வடக்கு மாகாண மீனவர்கள் ஐ நா வதிவிடப் பிரதிநிதியிடம் முன் வைத்துள்ளனர்.
இதன்போது புதிய சட்ட வரைபை பெற்றுக்கொண்ட ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தனியே ஒரு மாகாணத்தின் கோரிக்கை அல்லது பிரச்சணையா இது ஏனைய மாகாண மீனவர்களிற்குமான பிரச்சணையா என்பதனையும் கேட்டறிந்ததோடு ஏனைய மீனவர்களனது கோரிக்கையினையும் இணைக்குமாறும் ஆலோசணை வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாண மீனவர்கள் தமது பிரச்சனைகள் தொடர்பில் ஐ நா உயரதிகாரி ஒருவரை நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.