கனடா மொன்றியலில் வசித்துவரும் எழுத்தாளர் . கே. ரி சண்முகராஜா ஐயா அவர்கள் “ வீணைமைந்தன் “ என்ற புனைபெயரில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவருபவர் , பலராலும் அறியப்பட்டவர். இவரது படைப்புக்களில் ஒன்றான “நடிகர் திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும்” என்ற இந்த நூலை அண்மையில் வாசித்திருந்தேன். அந்த வகையில் இந்த நூலைப்பற்றிய சில விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனையும், அவரது சிறந்த நடிப்புத்திறத்தையும், தமிழ்ச்சினிமாவில் அவருக்கு இருந்த இடத்தினையும் அறிந்துகொள்வதற்குரிய ஆவணநூல்களுள் ஒன்றாக அமைகின்ற இந்த நூலானது அண்மையில் இந்தியாவிலும், ஈழத்திலும், கனடா ரொறன்ரோவிலும் வெளியிடப்பட்டது. முன்னூற்றித் தொண்ணூற்றாறு பக்கங்களைக்கொண்ட இந்த நூல் மணிமேகலைப்பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலுக்கான அணிந்துரைகளை திரைக்கலைஞர் கலைமாமணி சிவகுமார் அவர்களும் , மூர்த்த பன்னாட்டுச் செய்தியாளர் சிவா . பரமேஸ்வரன் அவர்களும் எழுதியுள்ளனர்.
இந்த நூலுக்குரிய வாழ்த்துரையை கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் . இந்த நூலில் அடங்கியுள்ள அத்தியாயங்களை தொடர்ச்சியாக தனது பத்திரிகையில் பிரசுரம் செய்து உதவியருமான . ஆர். என்.லோகேந்திரலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார்.மேலும் இந்த நூலில் வாசித்தோரில் நேசித்தோர் என்ற பகுதியும் இடம்பெற்றுள்ளது. இந்த நூலுக்குள் அடக்கப்பட்டுள்ள விடயங்கள் பத்திரிகையில் கட்டுரையாக வெளிவந்த காலங்களில் அதற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தவர்களது குறிப்புக்களே இந்தப் பகுதிக்குள் அடக்கப்பட்டுள்ளன.
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தமிழ்ச் சினிமாவுக்கு வந்தபின்னர் அதிக படங்கள் அடுத்தடுத்து வந்ததாகவும், நேரில் காணாத பல கடவுளர்களைக் கண்முன் காட்டிய பெருமையும், வரலாற்று நாயகர்களை அவர்களுக்கே உரிய வடிவிலும் குணாம்சங்களோடும் காட்டிய சிறப்பும் நடிகர் திலகத்திற்கே உரியது என்றும் கூறிச்செல்லும் நூலாசிரியர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முதற்படமான பராசக்தி தொடக்கம் அவர் நடித்த பெரும்பான்மையான படங்களில் அவரின் நடிப்புத்திறத்தோடு நடை, உடை, பாவனை, பேச்சு, உச்சரிக்கும் விதம், பாடல்கள், பாடல்கள் வெளிப்படுத்தும் உணர்வு, அவருக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் அவர்களின் நடிப்பின் பொருத்தம் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றியெல்லாம் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர்திலகம் ஏற்றுநடித்த பாத்திரங்கள் தன்னை வசப்படுத்திய வகையை அடிப்படையாக வைத்து அவருக்கு ஒவ்வொரு பெயர் கொடுத்து “ அண்ணன் கணேசன் தொடக்கம்” “ சிங்கத்தமிழனடா சிவாஜிகணேசன்” வரையாக ஐம்பது தலைப்புக்களில் நடிகர் திலகம் பற்றி எழுதியுள்ளார். ஒவ்வொரு படத்திலும் அவர் வரும் தோற்றப்பொலிவோடு படங்களும் போடப்பட்டுள்ளன. இந்த நூலின் இருபத்தாறாம் பக்கத்தில் நடிகர் திலகத்தினது உருவப்படமொன்று உயிரேட்டம் உடையதாக மிக யதார்த்தமாகவும், அழகாகவும் ஓவியக்கலைஞர் திரு. த. சௌந்தர் அவர்களால் வரையப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நூலின் சிறப்பு , இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்,இளைய தலைமுறைக்கு எந்தவகையில் பயனுடையதாக இருக்கும் என்பதோடு இந்த நூலுக்குரிய ஆசிரியரை வாழ்த்தியும் அதேநேரம் நடிகர்திலகத்தை முழுமையாக அறிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறதா என்ற வினாவுக்கும் விடையளிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற தினமலர்
, தினத்தந்தி, துக்ளக் மற்றும் தினகரன் போன்ற பத்திரிகைகளில் இந்த நூல் சம்பந்தமாகக் எழுதப்பட்ட பின்னூட்டமும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்ட சில விடயங்களை இங்கு எடுத்துக் கூறின் இந்த நூலைப்பற்றிய மேலும் பல விடயங்களை அறிய முடியும் என்றவகையில் அப்பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பார்க்கின் 11/01/2023 அன்று வெளியான தினமலர்‘ நடிகர் சிவாஜிகணேசன் பற்றிய நினைவுகளையும், அவரைச் சந்தித்து உரையாடிச் சேகரித்த செய்திகளையும், பிரபல வார இதழ்களில் வெளியான குறிப்புக்களையும் வைத்துத் தொகுத்து எழுதப்பட்ட இந்த நூலானது நடிகர் திலகம் சிவாஜி கணேசனது விழிகளின் வசீகரக்கூர்மை, இராஜகம்பீரத் தோற்றம் , சிம்மக்குரல் , ஒன்பதுவகை பாவங்களை கொண்ணூறு விதமாக நடித்துக்காட்டும் ஆற்றல் பற்றியெல்லாம் குறிப்பிடுகின்றது அத்தோடு சாமானியர்கள் முதல் சரித்திர நாயகர்கள் வரை சிவாஜி ஏற்று நடித்த பாத்திரங்களையும் , அவர் பெற்ற வெற்றிச் சாதனைகள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்கின்றது தினமலர்.
இந்த நூல் பற்றி தினத்தந்தி(02/10/2023)கூறுகையில், ‘இந்த நூல் சிவாஜிகணேசனது சினிமா வாழ்க்கைச் சம்பவங்களை புதிய கோணத்தில் படைத்திருக்கிறது என்றும் அவரது சாகாவரம் பெற்ற வசனங்களை அப்படியே தந்திருக்கின்றது என்றும் சிவாஜிகணேசன் தொடர்பான அரசியல் நிகழ்வுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன’ என்கின்றது.
மேலும் இந்த நூல் பற்றி ‘துக்ளக்’ (04/10/2023) கூறும்போது, ‘ இந்தியத் திரையுலகை புரட்டிப்போட்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் ஆளுமை குறித்து அணுவணுவாக இரசித்து, லகித்து, ஆய்ந்து நிறையத் தகவல்களை இந்த நூலில் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் என்றும் இந்நூலை இவர் உருவாக்க கடுமையான தேடல்களைச் செய்துள்ளார் என்பதற்கு இவர் எங்கிருந்தெல்லாம் தகவல்களைப் பெற்றுள்ளார் என்பதையும் துக்ளக் தனது பின்னூட்டத்தில் ஒவ்வொன்றாகச் சொல்லியுள்ளமை நூலாசிரியரின் கடுமையான தேடரல்களுக்குச் சான்றுகாட்டி நிற்கின்றது. அத்தோடு முன்னர் குறிப்பிடப்பட்டது போலவே இந்த நூலானது சிவாஜிகணேசனின் பெருமையையும், புகழையும், நடிப்பாற்றலையும், அவர் ஏற்றுநடித்த பாத்திரங்களைத் துல்லியமாக வெளிப்படுத்திய விதத்தையும் அடுத்த தலைமுறைக்கும் டுத்துக்காட்டும் மேலும் ஒரு ஆவணமாக இருக்கிறது என்றும் துக்ளக் கூறியுள்ளது.
மேலும் இந்த நூல்பற்றித் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழான தினகரன்(12/03/2023) கூறுகையில் ‘நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் வந்துள்ளன. அந்த நூல்களுள் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று ‘என்றும் சிவாஜிகணேசன் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்தாலும் எதுவுமே சிவாஜிகுறித்த சித்திரத்தை முழுமையாக வழங்கிவிடவில்லை ‘என்றும் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர் தேசத்தில் 35 வருடங்கள் வாழ்ந்த நூலாசிரியரின் தேடல்களையும் அவர் நடிகர்திலகத்தின் மீது கொண்டபற்றையும் ஈர்ப்பையும் இங்கு குறிப்பிடப்பட்ட எல்லாப் பத்திரிகைகளும் போற்றியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“நடிகர் திலகம் சிவாஜியும் தமிழ்ச்சினிமாவும்” என்ற பெயரை அட்டைப்படத்தில் பார்த்ததும் அங்கு சிவாஜிகணேசனின் வாழ்க்கைக்குறிப்பும் சினிமாத்துறைக்குள் புகுவதற்கு அவர்பட்ட பாடுகளோடு அத்துறையில் அவர் வளர என்னென்னவிடயங்கள் செய்தார் என்ற விடயங்கள் ஒரு ஒழுங்கான முறையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ததேன். தலைப்புக்கு ஏற்ப. உள்ளே பார்த்தபோது இந்த நூல் சற்று வித்தியாசமான பார்வையில் விரிவதைஅவதானிக்க முடிந்தது. நடிகர் திலகத்தின் வாழ்க்கைச் சம்பவங்களை நூலாசிரியர் ஆங்காங்கு சொல்லிச் சென்றாலும் அது ஒரு வரண்முறைக்குள் அமையவில்லை. இதற்குக் காரணம் இது வேறுபட்டகாலங்களில் வேறுபட்டதலைப்புக்களில் அவரைக்காட்டமுயன்றமை என்பதுவும் இங்கு புரிந்துகொள்ள முடிந்ததுதான்.
இந்நூல் மூலமாக வீணைமைந்தன் ஐயா அவர்கள் நடிகர்திலகம் சிவாஜிகணேசனையும் அவர் நடிப்பையும் அணுஅணுவாக இரசித்துள்ளமை தெரிகிறது இதனால்த்தான் அவர் நடிகர் திலகத்திற்கு பிரஞ்சுஅரசின் செவாலியே விருது கிடைத்தபோது கனடாவில் இருந்து லாஸ்- ஏஞ்சல்ஸ் வரை தேடிச்சென்று தனது கையால் வாழ்த்துமடல் எழுதி அதை அவருக்கு வாசித்தே வழங்கினார் போலும். இந்த நூலில் அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படமும் இணைக்கப்பட்டுள்ளது.
எப்படி இருப்பினும் முன்னர் கூறியது போல் இந்த நூலானது நடிகர் திலகம் பற்றியும், அவரின் நடிப்புத்திறம் பற்றியும் அறிந்துகொள்ளவோ அன்றி ஆய்வுசெய்யவோ நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
முக்கியமாக ஒருநூலிலேயே அந்த நூலுக்குரிய பின்னூட்டங்கள் எப்படிவரமுடியும் என்ற கேள்வி இக்கட்டுரையை வாசிப்பவர்களுக்கு ஏற்படும். அதற்காகக் குறிப்பிடுகின்றேன். இந்த நூலின் ஒருதொகுதி பின்னூட்டங்கள் அற்றது. அதுவே இந்தியாவில் முதன்முதல் வெளியிடப்பட்டது. இன்னும் ஒரு தொகுதி பின்னூட்டங்கள் கிடைத்தவுடன் அவற்றையும் சேர்த்து இணைக்கப்பட்டதாக உள்ளது.
பின்னூட்டங்கள் உள்ளதே என்கையில் கிடைத்ததல் அவற்றையும் உள்ளடக்கக்கூடியதாக இங்கு எனது பார்வை அமைந்திருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
உமா மோகன் (M.A)- மொன்றியால்