மனித வாழ்க்கையில் தைரியம் – மனத்துணிவு, தன்னம்பிக்கை என்பன பிரதானமானவை என்று பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தில்லைச்சிவம் வாழ்ந்து காட்டி வருகிறார். அவரது தன்னம்பிக்கை என்பது போற்றுதற்குரியது. எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். ‘வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை’ என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கிணங்க வாழ்க்கையை வடிவமைத்துப் பயணிக்கின்றார்.
இசைதான் மூச்சு. அதனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபித்து நிற்கும் கலைஞர் எஸ்.எஸ்.தில்லைச்சிவம் என்றால், அது மிகையானது அல்ல என்பதை அவருடன் சேர்ந்து பயணிக்கும் இசைக்கலைஞர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். வீரகேசரி கலையரங்கம் பகுதியில் கடந்த இருவாரங்களாக வெளிவந்த தில்லைச்சிவம் அவர்கள் பற்றிய தகவல்களைப் பத்திரிகையிலும், முகநூலிலும் வாசித்தறிந்த பலர் தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இசைக்கலைஞன் எஸ்.எஸ்.தில்லைச்சிவம் அவர்களை வாழ்த்தி மகிழ்வித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி.
இளையநிலா இசைக்குழுவுடன் பயணித்து வந்த எஸ்.எஸ்.தில்லைச்சிவம் தமக்கான ஒரு தனிப்பாதையை வகுக்க வேண்டிய நிலைக்குள்ளானார். 1995ல் ‘ஈழநிலா’ இசைக்குழுவை ஆரம்பித்தார். மிகக் குறுகிய காலத்தில் இசைப்பிரியர்கள் மத்தியில் பெரும் புகழீட்டினார். திருமண வைபவங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றும், கலைவிழாக்கள், ஆண்டுவிழாக்கள் என பிரமாண்டமான மேடைகளிலும் ‘ஈழநிலா’ இசை மழை பொழிந்தது. இசைக்கலைஞர்கள்,பாடகர்கள் என எல்லோரும் தில்லைச்சிவத்துடன் ஒத்தாசையாக இருந்து இசை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வந்தார்கள். இவரது பிரான்ஸ் வருகையில் இசைத்துறைப் பிரவேசத்துக்கு உந்துதலாக இருந்தவர்களில் முக்கியமானவர் பாடகர் கஜன். இருவரும் ஒன்றாக இசை நிகழ்ச்சிகளை பரிஸ் நகரிலே பார்த்து ரசித்தார்கள். குறிப்பாக இலங்கையில் இருந்து நமது கலைஞர்கள் இலங்கைக் கலையகத்தின் அழைப்பில் வருகைதந்து 1990ம் ஆண்டு பரிஸ் லா சிகால் பிரமாண்டமான மண்டபத்தில் நடைபெற்ற கலையமுதம் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர்கள் பயஸ்-ரட்ணம் இசையில் கஜன், நிரோஷா உடன் இணைந்து பாடல் ஒன்றைப்பாடியிருந்தார். இதுவே வெளிநாடு ஒன்றில் பாடகர் கஜன் அவர்கள் பங்குபற்றிய முதலாவது இசை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் ஒருவராகத் தில்லைச்சிவம் திகழ்ந்தார். அவருடனான உரையாடலில் இந்த நிகழ்ச்சிபற்றிய விடயம் மறக்க முடியாததாக இடம்பிடித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் நிறைவுப்பகுதியில் கிடைத்த விடுமுறையில் லண்டனிலிருந்து பரிஸ் நகரத்துக்கு ஒரு குறுகிய வருகையின் பொழுது, கஜன்,தில்லைச்சிவம் இருவரையும் ஒரு தேனீர் சந்திப்பில் கண்டு பேசிக்கொண்ட வேளையிலும் 1990ம் ஆண்டு கலையமுதம் நிகழ்ச்சி பற்றிய விடயங்கள் அலசப்பட்டன.
தில்லைச்சிவம் 1995ம் ஆண்டு ஈழநிலா ஆரம்பித்த பொழுது பாடகர் கஜன்,அமரர் ஜெயா உட்படச் சில பாடகர்கள் பக்க துணையாக இருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் சொந்தப்பாடல்களை உருவாக்குவதிலும் மிக உற்சாகமாக ஈடுபட்டு வந்தார். பரிஸில் நடைபெற்ற திரைப்பட முயற்சிகளின் பொழுது தயாரிக்கப்பட்ட ராஜாவின் ராகங்கள், புயல், தீ, சத்தியகீதை, நினைவு முகம், தயவுடன் வழிவிடுங்கள் போன்றவற்றுக்கு இசையமைப்பை மேற்கொண்டார். அவற்றுக்காகப் பல பாடல்களையும் இசையமைத்து வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து 1996ம் ஆண்டு ஜீவகானங்கள் இறுவட்டாக இவரது இசையமைப்பில் மாணி நாகேஸ், ஜெயா ஆகியோர் எழுதிய பாடல்கள் வெளியிடப்பட்டன.
மாணி நாகேஸ், ஜெயா, ஈழமுரசு ஆசிரியர் கஜன், கொலின்ஸ் எனப் பல படலாசிரியர்கள் எழுதிய பாடல்களுக்கு தில்லைச்சிவம் இசையமைத்துள்ளார்.
இவரது இசையமைப்பில் கஜன், ஜெயா, குமுதா, செல்வலிங்கம், இந்திரன் எனப் பல பாடகர்கள் பாடியிருக்கின்றார்கள்- பாடிவருகின்றார்கள். தில்லைச்சிவம் இசையமைத்த பாடல்கள் பல உள்ளன. அவற்றில், ‘தாய் நிலத்தை மறக்கலாமா’ ‘திசைகள் எட்டும்’ ‘பொங்கிடும் கடல் அலை’ என அதன் வரிசை மிக நீண்டது. இந்தப் பாடல்களில் இருந்து மிக உயர்ந்த இடத்தைப்பெற்றிருக்கும் பாடல் தான், பிரான்ஸில் வாழ்ந்து வரும் பாடலாசிரியர் மாணி நாகேஸ் எழுதி, பாடகர் இந்திரன் குரல் கொடுக்க எஸ்.எஸ்.தில்லைச்சிவம் இசையமைத்த ‘ அந்த ஆலமரம் நெஞ்சிலே நிறைந்திருக்கு’ என்ற பாடல் வானொலிகளிலும் மேடைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. இந்தப் பாடலை பாடகர் கஜனும் பாடிப்பதிவு செய்துள்ளார். இதற்கான காரணம் மாணி நாகேஸ் அவர்களின் உன்னதமான வரிகள், தில்லைச்சிவத்தின் உயிரோட்டமான இசையமைப்பு. கேட்போர் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கும். மண்ணையும் மக்களையும் மனதிருத்தும்.
ஈழநிலா இசைக்குழுவுக்கான வரவேற்பு பெருகிவந்தது. தமிழர் புனர்வாழ்வுக்கழக விளையாட்டு விழா, மாவீரர் நாள் அரங்கம் என யாவற்றிலும் தில்லைச்சிவம் வலம் வந்தார்.
இதேவேளை இசை வகுப்புகளையும் தில்லைச்சிவம் ஆரம்பித்து சுரத்தட்டு வகுப்புகளை மிகவும் வெற்றிகரமாக நடத்திவந்தார். மணவர்கள் மிகவும் சிரத்தையோடு இசைக்கலை பயின்றார்கள். இவரின் பெயர் கூறும் அளவுக்குப் பலர் இன்று சுரத்தட்டு இசைக்கலைஞர்களாக வலம் வருகிறார்கள். இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தில்லைச்சிவம் அவர்களைப் பல அமைப்புகள் மாண்பேற்றியுள்ளன. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் ‘ விடுதலை வேர்கள்’ என்ற விருது வழங்கியிருந்தனர். ஆர்.ரி.எம்.பிறதேர்ஸ் கலைநிகழ்ச்சி அமைப்பாளர்கள் எஸ்.எஸ்.தில்லைச்சிவம் அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி மாண்பேற்றியிருந்தனர்.
இசையே வாழ்வு என அதற்குள் மூழ்கியுள்ள தில்லைச்சிவம் இசைத்துறையில் தொடர்ந்து பயணித்து வருகிறார். இப்பொழுது உள்ள தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பாடல்களைப்பதிவு செய்து வழங்கி வருகிறார்.
பாடும் திறமையுடையவர்கள் அவரை அணுகும் பொழுது அவர்களால் பாடக்கூடிய பாடல்களை அவர்களது குரல்களில் பாடவைத்து, அழகாக இசை வழங்கிப் பதிவு செய்து கொடுக்கிறார். தில்லைச்சிவம் நல்லதோர் இசையமைப்பாளர் மாத்திரமல்ல, சிறந்ததோர் வழி காட்டி. அவரது வாழ்க்கை பலருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு கலைஞனால் எதை எல்லாம் சாதிக்க முடியுமோ அவற்றிலெல்லாம் மிக ஆழமாக இறங்கி நீச்சலடித்திருப்பவர் எஸ்.எஸ்.தில்லைச்சிவம். அவரது இசைப்பயணங்கள் மென்மேலும் சிறந்தோங்க நல்வாழ்த்துகள்
நன்றி; இலங்கை ‘வீரகேசரி வாரஇதழ்