முன்னாள் தவிசாளர் நிரோஸ்
மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் தமிழ் பண்னையாளர்களுக்கு எதிரான பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பை அரச இயந்திரம் தடுக்கவில்லை. மாறாக அதற்கு ஒத்துழைப்பாகவே இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்துவதற்கு சகல இடங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களப் போரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராக நாம் போராடுகின்றோம். வரலாற்று ரீதியில் எமது மக்களின் நிலங்கள் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு உட்பட்டே வருகின்றன. அதற்கு அரச இயந்திரமும் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றது. இலங்கையை இனவாதமற்றதாக அரசாங்கம் வெளியுலகிற்குக் காட்ட எத்தனிக்கும் அதேவேளை ஆரவாரமற்ற வன்முறைகளின் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீகத்தினையும் அவர்களது பொருளாதாரத்தையும் அழித்து வருகின்றது.
மயிலத்தமடு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கால்நடைகள் வன்முறையான மிகக் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன. பண்னையாளர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகார பலத்துடன் பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்பு அல்ல இப்பிரச்சினை. அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத நிகழ்ச்சி நிரலுடனான ஆக்கிரமிப்பு. நாம் வடக்குக் கிழக்கு எமது தாயகம் என்ற வகையில் இன்று யாழில் இவ் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளோம். தொடர்ந்தும் மயிலத்தமடுவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக சகல பிரதேசங்களிலும் வெளியுலகின் கவனத்தினை ஈர்ப்பதற்கான பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.