வோன் தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் தமிழ் தைப் பொங்கல் கொண்டாட்டம் 2024, வோன் தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்டது (Vaughan Tamils Heritage & Cultural Organization), ஜனவரி 20 அன்று Maple High School பள்ளியின் விசாலமான மண்டபத்தில் சிறப்புற நடந்தது.
சுமார் 1000 எண்ணிக்கையில் வரவு கண்ட மக்களும் விருந்தினரும் ஒழுங்கமைப்பாளர்களும் அரசியலாளர்களும் கல்வியியலாளர்களும் சொற்பொலிவாளர்களும் முத்தமிழ் வல்லுனர்களும் விழா அனுசரணையாளர்களும் ஆதரவாளர்களும் இசை நடன ஆர்வலர்களும் அரங்கு நிறைந்த கரகோசமும் இன்று பேசுபொருளாக கேட்கப்படுகின்றது.
பாரம்பரியமிக்க சுவைமிகு உணவுகளான பொங்கல், வடை, கடலை, என்பன இடைவேளைக்கு முன்னரும் பல நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியில் இடையிடையே தேனீர், கோப்பியும் பரிமாறப்பட்டு பின்னர் இராப்போசனமும் வயிறு நிறைய உவந்து அளித்தமை “விருந்தோம்பல்” பண்பு தமிழர்களின் அடையாளம் என்பதை உறுதியாக்கியது. இதற்கு காரணமானவர்களுக்கும் தன்னார்வ தொண்டர்களுக்கும் நன்றிகள்.
அறுவடைத் திருவிழாவின் அடி நாதமாக விளங்கும் பொங்கல் பண்டிகை நாளின் புகைப்பட இருப்பிடங்கள் கண் கவரும் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூடுதலாக, தோரணம் மற்றும் மாவிலையால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை, பார்வையாளர்களை ஒரு கணம் தாயகத்திற்குக் கொண்டு சென்றது. இது தமிழ் மரபுகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மட்டுமன்றி விழா முழுமையில் விழுமியங்கள் மாற்று மொழி பேசும் பிற இனத்தினருக்கும் எடுத்துக்காட்டியமை பாராட்டுக்குரியது. அத்துடன் பொங்கல் விழாவை திறம்பட ஒழுங்கமைத்தவர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகின்ற பல உதாரணங்கள் சொல்லால் விஞ்சி மனத்தை மகிழ்விக்கின்றன.
நிகழ்வு நல் ஆசிச்செய்தியுடனும் வாழ்த்துக்களுடனும் அரங்கேறியது. கலாச்சார அமிர்தத்தால் நிரம்பிய ஒரு பொன்மாலைக்கான தொனியை வரவழைத்தது. தலைவர் அன்பழகன்(கண்ணன்) குமாரசாமி ஒரு சிறந்த உரையினை சுருக்கமாகவும் அழகாகவும் நிகழ்த்தினார். ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து சங்கத்தின் தார்ப்பரிய எண்ணங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். இன்றுவரை நூற்றுக்கணக்கான குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சங்கம், வோன் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் உள்ள 2000 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ஒரு மூலக்கல்லாக மாறியுள்ளது. இது அப்பகுதியில் முதல் மற்றும் ஒரே ஒருபதிவு செய்யப்பட்ட தமிழ் சங்க அமைப்பாக உள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகள், ஆரோக்கிய முன்முயற்சிகள், விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சமூக நிகழ்வுகளை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு, அச்சங்கத்தின் சான்றாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.
Steven Del Duca (Mayor of Vaughan), Francesco Sorbara (Member of Parliament), Anna Roberts (Member of Parliament, King Vaughan), Stephen Lecce (Minister of Education), Vijay Thanigasalam (MPP, Scarborough-Rouge Park), Adriano Volpentesta (Councillor, City of Vaughan), Rod Lynn (York Board Chair), (Dr. Elizabeth Sinclair ( York School Trustee), Nadeem Mahmood (Trustee), Gary Anandasangaree (Minister of Crown-Indigenous Relations), Neethan Shan (Vice Chair and Trustee, Toronto District School Board), Jason Diplacido & Dinnesh Kulasekeren (York Police), Parthi Kandavel (Councillor, Scarborough Southwest Toronto), Ahmed Hussens (Minister of International Development) அத்துடன் பிற முக்கிய அமைப்பு சார்ந்த பிரமுகர்கள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் கொண்டாட்டத்திற்கு மரியாதை செலுத்தினர். அவர்களின் வருகையானது ஒன்றாரியோ என்னும் பரந்த மாகாணத்தின் நிகழ்வாக அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
அதேவேளை. கலைகளின் பறை வரவேற்பு நடனம், பல நடனங்கள், சிலம்பாட்டத் தற்காப்புக் கலைகள், இசைக்குழுக்கள், ஒலி ஒளி நிகழ்ச்சிகள் மற்றும் Mega Tunersன் மயக்கும் மாலை நேர இசை வார்ப்பு மிகு பாடல்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக அரங்கேற்றப்பட்டது. மற்றும் சமகால நிகழ்வுக் கூறுகளின் இணைவு தமிழ் சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மையையும் அதன் திறமையையும் வெளிப்படுத்தியது.
Toronto(ரொறன்ரோ) மாவட்ட தமிழ்க் கல்லூரிகளின் தமிழ்த்துறைத் தலைவர் திரு. பொன்னையா விவேகானந்தன் அவர்கள் எமது நிகழ்வின் அதிதிப் பேச்சாளராகப் (Keynote speaker)பங்கேற்றார். அவரது சொற்பொழிவு தமிழ் கலாச்சாரத்தின் செழுமையையும், வோன் சமூகத்தில் தைப் பொங்கலின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. விவேகானந்தனின் நுண்ணறிவு பிரதிபலிப்பு, விழாக்களுக்கு ஒரு துடிப்பான கலாச்சார பரிமாணத்தை சேர்த்தது. தமிழ் பாரம்பரியத்திற்கான ஒற்றுமை மற்றும் பாராட்டு ஆகியவற்றை வளர்த்தது.
இந்த நிகழ்வின் வெற்றியின் பெரும்பகுதிக்கு ஏராளமான வணிக ஆதரவாளர்களின் தாராள மனப்பான்மையும், அவர்களின் ஆதரவும் நன்றியுடன் ஒப்புக் கொள்ளப்பட்டது. செயலாளர் சுகனியா சின்னத்தம்பி, பங்களிப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மனமார்ந்த நன்றியுரையுடன் விழாவை நிறைவு செய்தார். வோன் தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் தமிழ் தைப் பொங்கல் கொண்டாட்டம் 2024 அரங்கம் போற்றும் பதிவாக பத்திரிகைகளில் பாராட்டைப் பெறுவதும் அந்நிகழ்வின் செயற்பாடுகளை எதிர்காலத்திலும் பெருமையுடன் ஈடேற்றி, புகழ் வாய்ந்த நிர்வாகத் தலைமையும் தகைமையும் நிகழ்காலத்தில் செயலாற்றுவது போன்று எதிர்காலத்திலும் எமது சமூகத்தை ஒன்றிணைத்து செழுமையான கலாச்சார அனுபவமாக நினைவு கூறுவோம்.
நன்றி திரு. அன்பேசிவம்