ஜார்க்கண்ட் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் நிலம் மோசடி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரி மாற்றத்தைச் செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கடந்த 20-ம் தேதி அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை காணொலியில் பதிவு செய்தனர். ஹேமந்த் சோரன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக அவருக்கு அடுத்தடுத்து 8 தடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவற்றுக்கு சோரன் பதில் அளிக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி வீட்டுக்கு விசாரணைக்கு வருவதாக அமலாக்கத் துறையினர் கடிதம் அனுப்பினர். இதற்கு முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
விசாரணை என்ற பெயரில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இருந்தார். இதற்கிடையே, முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த கடந்த சனிக்கிழமை டில்லி புறப்பட்டுச் சென்றார். தெற்கு டில்லியில் உள்ள அவரது வீட்டில் அவர் தங்கியிருந்தார். தகவலறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து அவரது உதவியாளர்கள் தொலைபேசியிலும் அமலாக்கத் துறையினர் தொடர்பு கொண்டனர்.
ஆனால் அனைத்து கைபேசிகளும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தன. என்றாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிலேயே காத்திருந்தனர். சுமார் 18 மணி நேரம் அவர்கள் காத்திருந்த நிலையில் ஹேமந்த் சோரன் திரும்பி வரவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அருகே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.