வோட்டர்லூ வட்டாரத்தில் ஸ்ரீ முருகன் இந்துக் கோயில் திறப்பு விழா நனவாகியது. கடந்த ஜனவரி 26, 2024 வெள்ளிக்கிழமை ” தைப்பூச திருநாளில்” கிச்சனரில் உள்ள “டூன் சமூக மையத்தில்” நடைபெற்ற இந்துக் கோவில் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து தமிழ் பக்தர்களையும் ஒன்றிணைக்கும் எண்ணம் 2002 ஆம் ஆண்டில் வோட்டர்லூ மக்கள் மனதில் உருவானது. அதைத் தொடர்ந்து சிறிய அளவிலான இந்து திருவிழாக்கள் மற்றும் மாதாந்த பஜனைகள், விளக்கு பூஜை, திருப்புகழ் போன்றவை இந்தப் பகுதியில் வாழும் மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயக்குமார் குருக்கள் அவர்களின் தலைமையிலான சிவாச்சாரிகளின் மந்திரங்கள் ஒலிக்க பூஜை ஆராதனைகளுடன் கணபதி சிலை மற்றும் முருகனின் வேல் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலைகள் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, கென் ஸ்ரீசங்கர் குடும்பத்தினரால் இந்த தெய்வங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
ஆலயசபைத் தலைவர் திரு.சிவகுமார் சோமசுந்தரம் அவர்கள் தனது உரையில், இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களின் ஆதரவு நிதி மற்றும் தார்மீக பங்களிப்புகளுடன் கோவிலை கட்டி எழுப்ப இன்றியமையாத தூண்களாக இருப்பதாகவும், எங்கள் சமூகம் ஒன்று கூடி வழிபடவும், தெய்வத்தின் முன்னிலையில் ஆறுதல் பெற ஒரு புனித இடத்தை உருவாக்க உதவும் என்றும், இது தமிழர்கள் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் பிற மொழி மக்களுக்கும் வழங்கப்படும் “சமூகக் கோவிலாக” விளங்கும் என்றும் கூறினார்.
பூஜை விழாவைத் தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்ச்சிகளில் நடனமும், இசையும் தமிழரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலித்தது. சிறு குழந்தைகளின் பஜனைப் பாடல்கள், முருகப்பெருமானைப் பற்றிய நடன நிகழ்ச்சி மற்றும் 6 புனித முருகன் சன்னதிகளை அடிப்படையாகக் கொண்ட காவடி நிகழ்ச்சி, நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகளும் சிறப்பித்தது.
இறுதியில் பிரசாத அன்னதானத்துடன் திறப்பு விழா இனிது நிறைவடைந்தது. இந்தப் பிரதேசத்தில் வாழும் சுமார் 600 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, வரவிருக்கும் ஆலயத்தின் பங்களிப்பை ஒரு ஆன்மீக மையமாக மட்டுமல்லாமல், கலாச்சார பரிமாற்றம் மற்றும் கூட்டு வளர்ச்சிக்கான துடிப்பான அமைப்பாக எதிர்கால தலைமுறைகளுக்கு நினைவூட்டுகிறது.
உள்ளூர் இலங்கை, இந்திய தமிழ்ச் சமூகத்தினரும், வோட்டர்லூ பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் பிரமுகர்களும் ஸ்ரீ முருகன் இந்துக் கோவிலின் அங்குரார்ப்பன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது .
தகவல்: அ . ஆதித்தன்