வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
தமிழரசுக் கட்சியின் 74 வருடகால வரலாற்றில் முதன்முறையாக கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மழை விட்டாலும் தூவானம் தொடர்வது போல் தமிழரசுக் கட்சியின்; நியமனங்கள் குறித்து இன்றும் பேசு பொருளாகவே உள்ளது. இந்த விடயம் தமிழர் தரப்பில் மாத்திரமல்ல தென்னிலங்கை ஊடகங்களிலும் பேசு பொருளாக உள்ளது.
தமிழரசுக் கட்சிக்குள ; இன்று நிலவுகின்ற பனிப்போர்; யார் தமிழரசுக் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது குறித்தாகவே உள்ளது. தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் அணியினரும் தலைவருக்கான தேர்தலில் தோற்றுப்போன சுமந்திரன் அணியினரும் களத்தில் நிற்கின்றனர். சிறீதரன் அணியினர் தம்மை முழுமையாக தமிழரசுக் கட்சிக்குள் நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் சுமந்திரன் அணியினர் இழந்து போன தலைமைப் பதவிக்கு ஈடாக பொதுச் செயலாளர் பதவியைத் தாம் சார்ந்தவரை அமர்த்தி தக்க வைத்துக் கொள்வதற்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழரசுக் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி எத்துணை சக்திமிக்கது என்பது சுமந்திரன் அவர்களுக்குத் தெரியும். ; பொதுச் செயலாளர் பதவியில் தனக்குச் சார்பானவரை அமர்த்திக் கொள்வதன் மூலம் தமிழரசுக் கட்சிக்குள் தனது பிடியினை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதும் சுமந்திரன் அவர்களுக்குத் தெரியும்.
அதேவேளையில் சுமந்திரனின் பிடி கை நழுவிப் போவதென்பது தமிழரசுக் கட்சியில் சுமந்திரனின் இருப்பை மாத்திரமல்ல சுமந்திரன் அணியினரின் எதிர் காலத்தையும் கேள்விக்குறியதாக்கிவிடும் என்ற அச்சத்திற்குள் அந்த அணியினர்; மூழ்கிக் கிடக்கின்றனர். ஆனால் சுமந்திரன் தான் எதிர்பார்த்திருந்த தலைமைப் பதவி பறிபோன நிலையிலும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு ஒருபுறம் சிறீதரனின் கைகளைப் பற்றிக் கொண்டு ஒன்றிணைந்து பயணிக்கத் தயார் என ஆதரவாளர்கள் மத்தியில் நேசக் கரம் நீட்டிய அதே வேளையில் மறுபுறம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை நோக்கிக் குறி வைக்கத் தொடங்கிவி;ட்டார். தலைவர் பதவியை விட பொதுச் செயலாளர் பதவியின் ஊடாக கட்சியை மாத்திரமல்ல கட்சி உறுப்பினர்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்பதை சட்டத்தரணி மூளை மாத்திரம் அல்ல ஏற்கனவே அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கூடாக அவர் சாதித்துக் கொண்ட மற்றும் பெற்றுக் கொண்ட வெற்றிகளின் சுவையினை நன்கறிவார். ; எனவேதான் சாணக்கியமாக தமிழரசுக் கட்சியின் ஒற்றுமையை முன்னிறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தைப் பழி வாங்கியதுடன் பொதுச் செயலாளர் பதவியை தனக்குச் சார்பான குகதாசனின் பெயரை முன்மொழிய வைத்து திருகோணமலை நோக்கி லாவகமாக நகர்த்திவிட்டார்.
அதாவது சுமந்திரன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்திக் கொண்டார். ஒன்று பொதுச் செயலாளர் பதவி என்பது கிழக்கு மாகாணத்துக்குரியது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வழங்கப்படும் எழுதப்படாத வரலாற்றைக் கொண்டுள்ளது. கிழக்கு மாகாணம் என்பது மட்டு மாவட்டம் மாத்திரமல்ல திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டமும் உள்ளடங்கும் என்ற வகையில் பொதுச்செயலாளர் பதவியை திருமலைக்கு சுமந்திரன் மாற்றிக் கொண்டார்.
இரண்டாவது தமிழரசுக் கட்சியின் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டார். மொத்தத்தில் தமிழரசுக் கட்சி மீண்டும் சுமந்திரனின் கட்டப்பாட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. இது சிறீதரன் அணியினருக்கு சிவப்பு விளக்காக மாறிவிட்டது. மறுபுறம் சுமந்திரன் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்றாலும் தமிழரசுக் கட்சிக்குள் தன்னை மீள நிலை நிறுத்திக் கொண்டமை சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
பச்சை மண்ணும் சுட்ட மண்ணுமாக பயணம்.
ஆனால் சுமந்திரனின் நகர்வுகள் அனைத்துமே இன்று தமிழரசுக் கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கின்றது. மொத்தத்தில் இரண்டு அணியாகிவிட்ட தமிழரசுக் கட்சி பச்சை மண்ணும் சுட்ட மண்ணுமாக இரண்டாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும். மொத்தத்தில் பொதுச் செயலாளர் பதவி கால அளவில் பங்கிடப்பட்டு சமரசம் காணப்பட்ட போதும் ஒரு வருடகால இடைவெளிக்கப்பால் விரிந்து பரந்ததாக பிளவு ஆழமாக நீறு புத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாகக் கொள்ளப்படும் நிலையில் தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அவர்களின் கை தேர்தலை நோக்கிய களை எடுப்புக்களுக்காகக் காத்திருக்கின்றன. அவ் வேளையில் சிறீதரன் அணியினரில் எத்தனை பேரின் தேர்தல் கனவில் மண் விழும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நடைபெறாத உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்காக தனது ஆதரவாளர்களையும் முன் நிறுத்தி தமிழரசுக் கட்சி தனி வழி போக வழி சமைத்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்குக் காரணமாக இருந்ததாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் குற்றம் சுமத்தின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்றபட்ட நிலை எதிர் காலத்தில் தமிழரசுக் கட்சிக்கும் உருவாகலாம் என்ற ஆரூடங்கள தற்போது; கூறப்படுகின்றன.
அதேவேளையில் தான் கொண்டிருந்த கடந்தகால நிலைப்பாடு தனது தோல்விக்கான காரணம் என்பதை நேர்காணல்களில் ஒப்புக் கொள்ளும் சுமந்திரன் அந்த நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொள்ள முடியாது என்றவாறான பதிலை தன்னுடனான நேர்காணல்களில் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது தமிழரசுக் கட்சி தலைவருக்கான தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்காக தனது கடந்தகால நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதுதான் அவரது பதிலாக உள்ளது. மொத்தத்தில் தனது நிலைப்பாட்டுக்கேற்ற வகையில் தமிழரசுக் கட்சியை முழுமையாக மாற்றி அமைப்பதே அவரது அடுத்த பணியாக உள்ளதென்றே கொள்ள முடியும். பொதுச் செயலாளராக மாறியுள்ள குகதாசன் மூலமாக உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் மூலம் தனது நிலைப்பாட்டுக்கு சாதகமானவர்களைக் கொண்டு கட்டி எழுப்பலாம் என்பது சுமந்திரன் அவர்களது திட்டமாக இருக்கலாம்.
கட்சியின் கோட்பாடு மக்கள் நலன் எல்லாம் எங்கே?
ஒரு கட்சிக்கான தேர்தலிலேயே இத்தனை போட்டிகள் கழுத்தறுப்புகள் இருப்பதானது கட்சியின் கோட்பாடு தமிழ் மக்களின் நலன் என அனைத்துமே மண்போட்டு மூடப்பட்டவைகளாகவே உள்ளன. இன்று அனைத்து தமிழ் தரப்பினரும் பேசுகின்ற தமிழ்த் தேசியம் தாயகம் எல்லாமே வெறும் கட்சிகளின் கதிரைகளுக்கான ஓட்டமாகவே உள்ளது. இதே பாணியிலேயே தமிழ் அரசியல் கட்சிகளின் தேசிய சர்வதேச அரசியலும் கட்சிகளின் கதிரைகளை அலங்கரிப்பவர்களினதும்; அவர்களது கூட்டாளிகளினதும் அரசியல் சுய நலன்களே மக்களின் நலன்களின் மற்றும் இனத்தின்பேரில் அரங்கேற்றப்படுகின்றது. தமிழரசுக் கட்சியின் தேர்தல் இதனைத் துலாம்பரமாகக் காட்டி நிற்கின்றது. இது தமிழரசுக் கட்சிக்கு மட்டும் உரித்தான பண்பு என்று கொள்வதற்கு அப்பால் அனைத்து அமைப்புக்களுக்கும் பொதுவான பண்பாக உள்ளது. குறிப்பாக அரசியல் கட்சிகளில் அது வடக்குக் கிழக்கிற்கு மாத்திரமல்ல மலையகத்தையும் உள்ளடக்கியதாகவே உள்ளன.
தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் சிறீதரன் 184 வாக்குகளையும் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றனர். 47 மேலதிக வாக்குகளால் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தேசியம் குறித்த பலப் பரீட்சையா?
தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் தேசியத்திற்கும்; தேசியத்திற்கு எதிரான சக்திகளுக்கும் இடையிலான பலப் பரீட்சை என நோக்ப்படுகின்றது. அதனடிப்படையில் தேசியம் வென்றதாகவும் கூறப்படுகின்றது. இன்னும் ஒரு சாரார் சுமந்திரனுக்கு எதிரான வாக்குகளே சிறீதரனின் வெற்றியை தீர்மானித்ததாக தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று அவர் செயற்பட்டதானது அவர் தலைவரானால் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பாதையில் தமிழரசுக் கட்சியின் பயணம் விரைவுபடுத்தப்பட்டுவிடும். அதனைத் தடுத்து நிறுத்தும் முகமாகவே சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் வாக்களித்துள்ளன என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
எதிர்கால அரசியல் நாற்காலிகளுக்கான போராட்டம்.
இந்த தேர்தல் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான தரப்புக்கும் எதிhத் தரப்பினருக்குமான களமாக அமைந்ததாக மேலோட்டமாகக் குறிப்பிடப்படுகின்ற போதும் உண்மையில் 90 சதவீதம் அவ்வாறானதல்ல என்று கூறுவதே பொருந்தும். ஏனெனில் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலுக்கு முன்பாக சுமந்திரன் அவர்களை மிக மோசமாக விமர்சித்தவர்கள் தேர்தலின் போது சுமந்திரனுக்கு வாக்களித்துள்ளனர். அவ்வாறு வாக்களித்தவர்கள் பகிரங்கமாகவே ஒத்துக் கொண்டுள்ளனர். அத்துடன் சுமந்திரன் அவர்களின் தெரிவான குகதாசன் அவர்களை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ளாவிடில் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் ஊடகப் பரப்பில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தேசியம் – தேசியத்திற்கு எதிர் என்ற கருத்தியலுக்கு அப்பால் உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்ற கதிரைகளுக்கான கனவில் போடப்பட்ட வாக்குகளாகும். தேசியத்தை நேசிப்பவர்கள் இருந்திருக்கலாம். அவர்களின் எண்ணிக்கை சொற்பமானதே. இந்த சொற்பமானவர்கள் தவிர்ந்த மற்றவர்களின் உண்மையான முகம் தேர்தல் காலங்களில் வெளிச்சத்துக்கு வரும்.
கூட்டமைப்பின் சிதைவுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
அத்துடன் தமிழ் மக்களுக்கான விடிவுப் பாதையை நோக்கி நகர்வதற்கான களமாகவும் இந்தத் தேர்தலைப் பார்க்க முடியாது. ஏனெனில் 2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னரான கடந்த 15 வருடகால தமிழரசுக் கட்சியின் அரசியல் நகர்வுகளில் இந்தத் தேர்தலில் வாக்களித்த அனைத்து தரப்புக்களுக்கும் பங்குண்டு. குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெயரில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் நலன்சார்ந்த நகர்வுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கு தலைமை மாத்திரமல்ல தலைவருக்கான தேர்தலில் வாக்களித்த தமிழரசுக் கட்சியின் தூண்களும் பொறுப்புக் கூற வேண்டும்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதான மொனத்துக்கும் பதில் கூற வேண்டும்.
அதே வேளையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் ; முக்கியஸ்தர்கள் மௌனம் காத்து மக்கள் அழிவைத் தடுக்காது இருந்தமைக்கான குற்றத்தை தமிழரசுக் கட்சியின் தலைமை மாத்திரமன்றி தமிழரசுக் கட்சிக்கான தலைவருக்கான தேர்தலில் வாக்களிக்க முண்டியடித்த உறுப்பினர்களும் ஏற்றாக வேண்டும்.
வென்றவர் அணி வீழும்வரை அல்லது சமரசம்வரை போட்டி தொடரலாம்?
உண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் “தோல்வி வெற்றியாகவும”; -“வெற்றி தோல்வியாகவும்” அமைந்திருக்குமாயின் தேசியத்தின் போக்கினை திசை மாற்றுவதற்கான பச்சை விளக்காக மாறியிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.. ஆனால் அது உண்மை இல்லை. தற்போது தமிழரசுக் கட்சியின் உள்ளக நகர்வுகளை உற்று நோக்கினால் தமிழ்த் தேசியத்தின் போக்கினைத் திசை மாற்றும் நகர்வுகளுக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. இந்த இலக்கை நோக்கிய பயணத்திற்கு தமிழரசுக் கட்சிக்குள் சீரமைப்பு என்ற போர்வையில் களை எடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படலாம். அந்த வகையில் தமிழரசுக் கட்சிக்குள் வென்றவர் அணி வீழும்வரை அல்லது சமரசத்துக்குப் போகும் வரை தேர்தலின் போது நிகழ்ந்த போட்டி தமிழரசுக் கட்சிக்குள் தொடரப்போகின்றது.
எழுதப்படாத வரலாறு மாறிவிட்டது.
கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை என்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. அதனடிப்படையில் பொதுச் செயலாளர் பதவி திருகோணமலை குகதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தத் தெரிவு கூட சுமந்திரன் அவர்களின் தெரிவுதான். அதனை தலைவர் சறீதரனுக்கூடாக சாதித்துக் கொண்டார்.தமிழரசுக் கட்சிக்குள் தனது பிடியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக சாணக்கியமாகக் காய்களை நகர்த்திய சுமந்திரன் அவர்களின் சாணக்கியம் தமிழர் தரப்பில் சிங்களத் தலைமைகளிடம் தோற்றுப் போகக் காரணம் என்ன என்பதற்கான காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும்.
பொதுச் செயலாளர் குறித்த பொதுச் சபையின் தீர்மானம் முடிந்த முடிவானது என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு. இதனை மாற்றுவதாக இருந்தால் ஒரு வருடத்தின் பின் பொதுச் சபை கூடி தீர்மானம் எடுக்கலாம் என்பதும் சுமந்திரனின் நிலைப்பாடு. எனவே இங்கு சமசரத்திற்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை. ; ஏனெனில் தமிழரசுக் கட்சியின் ஒற்றுமை என்ற கருப்பொருளை மையமாக வைத்து சுமந்திரன் நகர்த்திய காய்களுக்குள் சிறீதரன் சிக்க வைக்கப்பட்டுள்ளார். சுமந்திரனால் பகிரங்கப்படுத்தப்பட்ட கடிதம் மற்றும் நேர் காணல்களில் அவர் கூறியுள்ள விடயங்கள் என்பன எவ்வாறு சுமந்திரன் திட்டமிட்டு தனது பிடியினை தமிழரசுக் கட்சிக்குள் வைத்திருப்பதற்காக குகதாசனை பொதுச் செயலாளர் பதவியில் அமர்த்துவதற்காக மேற்கொண்ட சாணக்கிய நகர்வுகளைக் காணக் கூடியதாக உள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாடு நடைபெறவுள்ளது. அந்த மகா நாட்டுக்குள் சமரசம் காண்பதற்கான முயற்சிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பந்தன் ஐயாவின் பிரவேசம்.
இந்த ஒரு பின்னணியில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களை கடந்த 13 ஆம் திகதி அன்று (13.02.2024) சந்தித்த கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனிடம்
– சூழ்ச்சிகளை முறியடியுங்கள்.
• “உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடத்துமாறு, அறிவுறுத்தியுள்ளார்.- இணக்கமின்றேல் தேர்தல்
• அத்துடன் கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிருவாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச்சபை அங்கீகரிக்காதவிடத்து, அல்லது அத்தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடாத்தி, அன்றையதினமே மாநாட்டையும் நடாத்துமாறும் அவர் மேலும் கூறியுள்ளார். இதற்கு சுமந்திரன் அவர்கள் உடன்படுவாரா என்பதை புதிய தலைவரான சிவஞானம் சிறீதரனின் நகர்வை அடுத்தே தெரியவரும்.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்மானமிக்க நாளாக அமையலாம்.