–
திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கட்டளை
நடராசா லோகதயாளன்
இலங்கை தமிழரசு கட்சியின் 19 ஆம் திகதிய மாநாடு மற்றும் தலைவர்தேர்வு உள்ளிட்டவற்றிற்கு இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் 15-02-2024 அன்று இடைக்கால தடை விதித்து கட்டானையொன்றினை பிறப்பித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற் குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
கடந்த 21 மற்றும் 27ம் திகதிகளில் நடை பெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றது என வாதம் முன்வைக்கப்பட்டது.
எனவே குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் அமைப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெளிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரனானது எனவும் இதன் போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு -கோணேஷபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக இவ் வழக்கினை தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா,எஸ். ஸ்ரீதரன், எம்.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்ற தடையை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றமும் விதித்துள்ளது.