(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (19) முற்றுகையிட்ட பொலிசார் 150 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்ததுடன் 3 இலச்சத்து 50 ஆயிரம் மில்லி மீற்றர் கோடா, உற்பத்தி உபகரணங்கள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்டத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமானவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் அத்தியட்சகர் ஜனக்க ஜெயரத்தினாவில் வழிகாட்டலில்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துசார அபயவர்தனா தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் 150 போத்தல் கசிப்பு 3 இலச்சத்து 50 ஆயிரம் மில்லி மீற்றர் கோடா, கசிப்பு உற்பத்தி உபகரணங்கள், மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் பெரல்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.