ஆயுத பலத்துடனிருந்த விடுதலைப்புலிகள் மௌனித்து விட்டார்கள்,அரசியல் பலத்துடனிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைத்து விட்டோம்.சற்று உயிர்ப்புடனிருக்கும் தமிழரசுக்கட்சியையும் முடக்கி விட்டால் தமிழர் தீர்வுக்கான சர்வதேச அழுத்தங்கள் இன்றி,தமிழரை திருப்திப்படுத்த வேண்டிய அவசியமின்றி சிங்களவர்களுக்கான ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகலாம் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் ”நரிமூளை ”திட்டமே ” வீடு”உடைக்கும் ஒப்பந்தம்
கே.பாலா
விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டமும் அவர்களின் இராணுவ வெற்றிகளும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான உள்நாட்டு, சர்வதேச பேச்சு முயற்சிகளில் தமிழர் தரப்பின் மிகப் பெரும் பலமாக இருந்த நிலையில் சமாதானம் பேசிப்பேசியே முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சூழ்ச்சிகள், கூட இருந்தே நடந்த குழிபறிப்புக்கள், காட்டிக் கொடுப்புக்களினால் 2009 ஆம் ஆண்டுடன் விடுதலைப் புலிகளின் போராட்டமும் பேரம் பேசும் ஆயுத பலமும் மௌனிக்கப்பட்டன.
அதன் பின்னர் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட அரசியல் ஆயுதமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான உரிமைப்போரை அரசியல் ரீதியாக முன்னெடுத்தது.தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சர்வதேச நாடுகளும் ஏற்றுக்கொண்டதுடன் தமிழர் தரப்பின் உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடனேயே தொடர்புகளையும் பேணி வந்தன.
இந்தியா,அமெரிக்கா கூட தமது அரசியல் காய் நகர்த்தல்களுக்காக இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பையே பயன்படுத்தி வந்தன.அத்துடன் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், தீர்வுகள் வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பும் சர்வதேச நாடுகள் , ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களை நாடியதனால் அது இலங்கை அரசுக்கும் பல வழிகளிலும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தியது.
இவ்வாறான நிலையில் மைத்ரி -ரணில் நல்லாட்சி அரசு உருவான நிலையில் தமது ஆட்சிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் சர்வதேச அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க ,தமிழ் தேசியக்கூட்டமைப்பை தனது ”சின்ன வீடு”போன்றே வைத்திருந்தார். அத்துடன் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை அப்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்பந்தனுக்கு வழங்கியதால் அந்த நல்லாட்சியில் தமிழ் மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அடக்கியே வாசித்ததுடன் அரசை ஆதரிக்கும் எதிர்கட்சியாகவும் பல விடயங்களில் செயற்பட்டது.
ஆனால் பின்னர் ஏற்பட்ட போர் குற்றவாளியான கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் அவருக்கு சர்வதேச ரீதியில் இருந்த எதிர்ப்புகளை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு ராஜபக்சக்களின் ஆட்சிக்கு எதிராக சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகித்ததனால் ராஜபக்சக்களின் ஆட்சிக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டன. இதன்மூலம் தமிழ் மக்களுக்கு சாதமான சூழல் ஏற்பட்டுவந்த நிலையில் தான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் ”கோ கோம் கோத்தா” போராட்டங்கள் தீவிரம் பெற்றதனால் நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி ” அரசியல் குள்ள நரி”ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். ஆனால் இம்முறை அவர் தனது ஜனாதிபதிக் கனவை அதிர்ஷ்டத்தின் மூலம் நனவாக்கியதனாலும் அப்பதவியை தொடரவும் விரும்பியதனாலும் சிங்களவர்களை திருப்திப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றார்..அதனால் அவர் தமிழ் மக்களின் உரிமைகள் ,அவர்களுக்கான அரசியல் தீர்வுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தனக்கு வரக்கூடிய சர்வதேச அழுத்தங்களை குறைக்க முடிவு செய்துள்ளார் .
அதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைக்கும் , பிளவுபடுத்தும் முடிவை எடுத்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நமபிக்கைக்குரிய தளபதியான கருணாவையே விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிளவுபடுத்தி விடுதலைப்புலிகளின் முடிவுக்கு பிள்ளையார் சுழிபோட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிளவு படுத்துவது ஒன்றும் பெரிய விடயமாக இருக்கவில்லை.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைக்க அதற்குள் இருந்த வடக்கு பிரதிநிதி ஒருவரையும் கிழக்கு பிரதி நிதி ஒருவரையும் தெரிவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிக இலகுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதறடித்தார். ரணிலின் கைக்கூலிகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் கலகங்களை செய்து,குழப்பங்களை ஏற்படுத்தி , முரண்பாடுகளை தோற்றுவித்த அந்த இரு பிரகிருதிகளினாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உடைந்தது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தாய் கட்சியாக கருதப்பட்ட அந்த இரு பிரகிருதிகளும் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து தனித்து வெளியேறியது. இதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பாக தமிழருக்கான அரசிய உரிமைகள், தீர்வுகள் விடயத்தில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டு வந்த சர்வதேச நெருக்கடிகள் , அழுத்தங்கள் ரணில் அரசுக்கு குறையத் தொடங்கின.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு உடைந்ததனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தனும் பதவியை இழந்தார். இரா.சம்பந்தன் சர்வதேச நாடுகளின் நன் மதிப்பை பெற்றவர். அவரின் கருத்துக்கள், வேண்டுகைகளுக்கு சர்வ்தேச நாடுகளின் தலைவர்கள் மதிப்பளிப்பது வழக்கம்.அதிலும் குறிப்பாக இந்தியா இரா.சம்பந்தனையே அதிகம் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு சில நெருக்கடிகளை கொடுத்தது. சம்பந்தனும் இந்தியாவை பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை .அழுத்தங்களை கொடுத்து வந்தார்.
இவ்வாறான நிலையில் வயது மூப்பின் காரணமாக இரா. சம்பந்தன் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் சற்று தொய்வுகண்டார். இந்நிலையை பயன்படுத்தி இரா.சம்பந்தனை அரசியலிலிருந்து அகற்றும் அடுத்த காய் நகர்த்தலை சம்பந்தனால் வளர்க்கப்பட்ட வடக்கு பிரதிநிதியான அந்த ”கடா”மூலமே ரணில் முன்னெடுத்தார். இதன்வெளிப்பாடாகவே ” அரசியல் ரீதியாக செயற்பட முடியாத நிலையில் உள்ள இரா.சம்பந்தன் எம்.பி. பதவியிலிருந்து விலக வேண்டும்”என அந்த ”வளர்த்தகடா ”கத்தியது.
இவ்வாறான நிலையில் தான் ”பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல்’ இலங்கை தமிழரசுக்கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைத்தாகி விட்டது. அதில் இருந்த பங்காளிக்கட்சிகள் இன்று பல்லுப் பிடுங்கிய பாம்புகளாகி விட்டார்கள். எனவே செயற்பாட்டு நிலையில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியை தனது கைப்பாவைக் கட்சியாக மாற்றினால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்காமலும் விடலாம் என்ற ரணிலின் நரி மூளைத் திட்டத்தின் பின்னணியிலேயே ஏக மனதாக தெரிவு செய்யப்படும் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் நியமனத்தில் போட்டித்தன்மை ஏற்படுத்தப்பட்டு அது இரகசிய வாக்களிப்பு வரை சென்றது.
ஆனால் இலங்கை தமிழரசுக்கட்சியில் உள்ள தமிழ் தேசியத்தின் காவலர்களினால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டு தமிழ் தேசியத்தின் பாதுகாவலராக கருதப்படும் ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைத்த அந்த வடக்கு,கிழக்கு பிரகிருதிகளினால் இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதுவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாகவே இருந்தது. தமிழரசுக்கட்சியை தனக்கு சார்பாக மாற்ற திட்டமிட்ட அவர் அது முடியாத நிலையில் தனது விசுவாசிகளின் தோல்வியை பயன்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சியை முற்றாகவே முடக்க திட்டமிட்டுள்ளார்.
அதன் பின்னணியிலேயே ”எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரு கண்களும் போக வேண்டும் ”என்ற முட்டாள் சிந்தனையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் தெரிவில் குழி பறிப்புக்கள்,குழப்பங்கள், சதிகளை செய்து ”உள்வீட்டு” பிரச்சினையை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த இந்த ரணில் விசுவாசிகள் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சியை நீதிமன்றத்திலும் நிறுத்தியுள்ளனர்.இந்த விசுவாசிகளின் விசுவாசிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்குகளில் தமிழ் தேசியத்திற்கு எதிரான தரப்பும் தமிழ் தேசியத்தை பாதுகாக்கும் தரப்பும் ”சமாதானம்” காணாவிட்டால் வழக்குகள் இழுபட்டு ஒரு சில வருடங்களுக்கேனும் இலங்கை தமிழரசுக்கட்சி முடக்கநிலையில் இருக்க வேண்டியேற்படும்.
இந்த கால அவகாசம் சர்வதேச அழுத்தங்களை குறைத்து, தமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களை மட்டும் திருப்திப்படுத்தி மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு போதுமானது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்,பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன் , பிரபாகரனுக்கு ஒரு கருணா போன்ற ”உள்வீட்டு ”துரோகிகள் இருக்கும்வரை ரணில் விக்கிரமசிங்க போன்ற பேரினவாத ஆட்சியாளர்களுக்கு வெற்றிதான்.