(கட்டுரையாளர் வி .எஸ். சிவகரன்)
அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகலிடம் என்றார் மாக்கியவல்லி. அந்த கூற்றை எத்தனை ஆண்டுகள் கடந்தும் அரசியல் வாதிகள் நிரூபித்த வண்ணமே உள்ளனர். தமிழர்களின் அரசியல் செல்நெறியை உருவாக்கியதும் கோட்பாட்டு சித்தாந்தத்தை திடமாக தடம் மாறாத நோக்கு நிலையில் உருவாக்கிய தமிழரசுக்கட்சியும் பதவி மோகத்தாலும் சந்தர்ப்ப வாத சுயநலத்தாலும் தடுமாறுகிறது.
1976/05/14 ல் இருந்து தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் அங்கம் ஆகியதன் பின்னர் 10/01/2010 ல் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் தான் தனது 13 வது தேசிய மாநாட்டை பகிரங்கமாக நடாத்தியது. அதில் இருந்து யாப்பு மீறல் என்பது தொடர்கிறது. இதற்கிடையில் 27/04/2008 யாழ்ப்பாணம் கட்சி அலுவலகத்திலும் 23/08/2008 கொழும்பிலும் உள்ளக ரீதியாக நடை பெற்ற கட்சிக் கூட்டங்களில். விதி 02 ( அ) சமஷ்டி எனும் சொல்லை நீக்கிவிட்டு இணைப்பாட்சியின் என்ற சொல்லை பதிலீடு செய்துள்ளனர்.
இது மட்டுமன்றி வேறு பல திருத்தங்ளும் செய்துள்ளனர் அத் திருத்தங்களை 26/05 /2011 மாவை சேனாதிராஜா பொதுச் செயலாளராக இருந்த போது மகிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணையாளராக இருக்கும் போது தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டு மகிந்த தேசப்பியவால் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால் தற்போது தேர்தல் திணைக்கள இணையத்தில் மேற்கூறிய திருத்தம் உடைய யாப்பு இல்லை.25/09/2020 ல் வழங்கப்பட்ட யாப்பே காணப்படுகிறது கட்சி தலைமை அலுவலகத்திலும் கட்சியின் முக்கிய நபர்கள் என கூறப்படும் வர்கள் இடத்திலும் இதை விட வேறு விதமான யாப்பு க்கள் காணப்படுகின்றன வேறு சிலர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாப்பை தமிழரசுக் கட்சியின் யாப்பாக நினைத்து வியாக்கியானம் செய்கின்றனர்.
ஆகவே கட்சியிடம் தெளிவான யாப்பும் இல்லை. அதைப்பற்றி அவர்கள் ஆழமாக சிந்தித்ததும் இல்லை. பிரபல சட்ட வல்லுநர்கள் என்று தம்மை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடிய பலர். கட்சியில் பல்வேறு விதமான பொறுப்பில் இருந்துள்ளனர். தற்போதும் இருக்கின்றனர்.
குறிப்பாக சனாதிபதி சட்டத்தரணிகளான சுமந்திரன், தவராசா சட்டத்தரணிகளான சம்மந்தன் துரை ராசசிங்கம் ,சயந்தன் இவர்களை விட மாவட்ட ரீதியாக பல இளம் சட்டத்தரணிகள் உள்ளனர். இவர்கள் மாத்திரமன்றி பல பேராசிரியர்கள் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் இதர பல கல்வியாளர்கள் என பல்வேறு துறை சார்ந்த புத்திஜீவிகள் என எந்த தமிழ்க் கட்சியிலும் இல்லாத அளவுக்கு தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்தனர் காரணம் வடகிழக்கை ஓரளவுக்கேனும் பிரதிநிதித்துவப் படுத்தியது தமிழரசுக் கட்சி தான் என்பதில் எவருக்கும் இரு கருத்து நிலை இல்லை.
ஆனால் இத்தனை பட்டம் பெற்றவர்கள் இருந்து என்ன பயன் ஒரு கட்சியோ அல்லது அமைப்போ, குடுப்பமோ ,வணிகமோ எதற்கும் மிகவும் அடித்தளமாக விளங்குவது யாப்பு ரீதியான இருப்பியல் கோட்பாடே அதில் ஆட்டம் கண்டால் யாவும் அசைந்துவிடும்
ஆகவே இன்றைய தடுமாற்றத்திற்கு கறுப்பு கோட்டு போட்ட எல்லா சட்டம்பிகளும் பொறுப்புக்கூற வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் மறுபெயர் சமஷ்டிக் கட்சியே ஆனால் அந்த சொல்லையே நீக்கிவிட்டு அதை சட்டப்படி தேர்தல் திணைக்களத்தில் வழங்கிவிட்டு வெளியே தெரியாத படி மறைத்தும் வைத்துள்ளனர். இது மிகப் பெரிய ஏமாற்று நாடகம் எதுவும் அறியாத வாக்காளன் இவர்களின் உணர்ச்சிவச தேர்தல் பேச்சை நம்பி கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கிறார்கள் இவ்விதமான ஏமாற்றுக்கள் எல்லாம் அவர்களுக்கு மட்டுமல்ல கட்சியில் பதவியில் உள்ள பலருக்கும் புரிவதில்லை. புரிய முயல்வதும் இல்லை.
இப்போது மட்டுமல்ல இவர்கள் ஏலவே கூட இப்படி பல முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்வது வாடிக்கை தான் 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக தேர்தலை சந்தித்த போது தமிழரசின் தளபதியாக இவர்களின் ஆதர்ச நாயகனாக அக் காலத்தில் விளங்கிய
அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இராசதுரையும் தமிழரசுக் கட்சியில் காசியானந்தனையும் களமிறக்கி பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தினார் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து கொள்ளும் போது ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டுக்கு அமைய இ தொ. கா வடகிழக்கு கோட்பாட்டில் மலையக அரசியல் சாத்தியமில்லை என்று வெளியேறினார்.
அது வேறு விடயம் ஆனால் அமிர்தலிங்கம் அத் தேர்தலில் தமிழரசுக் கட்சியையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் களத்தில் இறங்கி தனது மாறுபட்ட நிலையை வெளிப்படுத்தினார். அது மட்டுமல்ல குமார் பொன்னம்பலம் அத் தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியை கேட்க இல்லை நீங்கள் ஏலவே வெற்றி பெற்ற பருத்துறை தொகுதி தரலாம் என அடம்பிடித்து அவர்கள் வெளியேறும் நிலையை தோற்றுவித்தார். அது மட்டுமல்ல அவர்களது கட்சி சின்னம் கூட இரத்தாகியிருந்தது. அதனால் அவர்கள் அத் தேர்தலை சுயேட்சையாக எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பதிவு நீக்கத்திற்கு அமிர்தலிங்த்தின் சூழ்ச்சியே என்று குமார் பொன்னம்பலம் விமர்சனம் செய்தார் பின்னர். ஜே.ஆரின் அனுசரணையில் தான் கட்சியை மீட்டனர் என்றும் கதையுண்டு அது வேறு விடயம்.
அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் இவ்விதமான ஏமாற்று வேலைகளை சர்வசாதாரணமாக செய்ய தயங்குவதில்லை.
தமிழரசுக்கட்சியில் தற்போது பதில் பொதுச் செயலாளராக இருக்கும் மருத்துவர் சத்தியலிங்கம் அப்பதவியை வகிக்க முடியாது. விதி 07 பொதுச்சபை (அ). ஒரு துணைப் பொதுச் செயலாளர்.
2014 ஆண்டு நடந்த கட்சியின் 15 வது தேசிய மாநாட்டில் இருந்து துணைப் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்கிறார் சத்தியலிங்கம் 2017 ல் நடைபெற்ற 16 வது தேசிய மாநாட்டில் தான் அவரும் துணைப் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார் அப்படியாயின் யாப்பின் படி இரண்டு துணைப் பொதுச் செயலாளர்கள் பதவி வகிக்க முடியாது.
ஆகவே இந்த இடைக்காலத்தில் பதில் பொதுச் செயலாளராக பணியாற்றியது சரியா அதை தேர்தல் ஆணையம் எப்படி ஏற்றுக்கொண்டது என்ற பல கேள்விகள் எழலாம் அப்படியே அது தவறு என்றால் அவரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கும் இவை எல்லாம் மாவை சேனாதிராஜாவின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே கட்சியின் எழுதப்படாத மரபை மீறி பத்து ஆண்டுகள் தலைவராக இருந்து சாதித்தவை என்ன கட்சியின் தாபகர் தந்தை செல்வநாயகம் கூட இரண்டு தடவைகளில் விலகி செயலாளராக கூட இருந்தார் தமிழரசுக் கட்சியின் இறுதி சவப்பெட்டிக்கு சேனாதிராஜா தான் ஆணி அடிப்பார் என அமிர்தலிங்த்தின் துணைவியார் இறப்பதற்கு சில காலத்திற்கு முன்னர் ஒரு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் தான் அண்மைய நகர்வுகள் உள்ளன.
ஆகவே கட்சிக்குள் போட்டி வருகிற போதே பிரிவு அல்லது பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது வழமை தான் அதே அறிவாற்றல் மூலம் தந்தோரபாயமாக தற்காத்துக் கொள்வதற்கான சிறந்த உத்திகளை பயன்படுத்த வேண்டியதே தலைமையின் ஆளுமை வெளிப்பாடு இங்கு ஏட்டிக்குப் போட்டி அரசியலே நகர்கிறது மிகவும் பலவீனமான நிலையில் உள்ள தமிழினத்தின் எதிர்கால இருப்பு பற்றி எவருக்கும் கிஞ்சித்தும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை.
ஆகவே நடந்த தவறை ஏற்றுக் கொண்டு கட்சியினதும் தமிழினத்தினதும் எதிர்காலத்தை எண்ணி நீதிமன்றில் இருந்து விடுவித்துக் கொள்வதே சிறந்த தலைமைக்கு அடையாளம். இல்லையேல் வரலாறு இவர்களை ஒரு போதும் மன்னிக்காது சிரித்திரன் ஆசிரியரின் கேள்வி பதில் தான் நினைவுக்கு வருகிறது சித்திரையில் புத்திரன் பிறந்தால் அக்குடி கெடுமாமே ? என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலாக இப்படி கேட்டார் அப்படியானால் நம் தமிழ்த் தலைவர்கள் சித்திரையிலா பிறந்தார்கள் என்று. அளவானவர்கள் அணிந்து கொள்ளுங்கள் அறிய வேண்டியவர்கள் அளந்து கொள்ளுங்கள்.
(தொகுப்பு:-எஸ்.ஆர்.லெம்பேட்)