பா.ஜ.க. தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜனதாவில் இணைந்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி பா.ஜ.கவில் இணையப்போவதாக தகவல் வெளியானது.
கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் பா.ஜ.கவில் இணையப்போவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இதனை காங்கிரஸ் கட்சி மறுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி எம்.எல்.ஏ விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டில்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார்.