தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு காலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அங்கு தமிழகம் முழுவதில் இருந்து வந்துள்ளன திமுக தொண்டர்கள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.