போதையில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குமிழமுனை, செம்மலை, முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் (01) குறித்த குடும்பஸ்தர் குமிழமுனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தார். இதன்போது மதுபோதையில், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தவறான பக்கத்துக்கு வந்து மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.15 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான மற்றைய இருவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், மற்றையவர் மாஞ்சோலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.