வடமேற்கு மாகாணத்தில் உள்ள தமிழ்முஸ்லிம் கிறிஸ்தவ பாடசாலைகள் பௌதிக மற்றும் மனித வளம் குறைவானதாகவும் அதன்காரணமாக கல்வி மேம்பாடு குறைவாக காணப்படுகின்றன, இவ்வகையில் 75க்கு அதிகமான மாணவர்களைக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட் ஊடாக கற்பிக்கும் முறைமையை வழங்கி மனிதவள இழப்பை ஈடு செய்ய IMHO நிறுவனமும் Ratnam Foundation நிறுவனமும் இணைந்து வலயகல்விப்பகுதியினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்த செயற்றிட்டம் வெற்றிகரமாகவும் முன்னேற்றகரமாகவும் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
இம்மாதம் 1ம் திகதி புத்தளம் நகரில் இருந்து ஏறத்தாள 50 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கல்பிட்டியில் உள்ள அரசினர் றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலயத்திற்கு IMHO வதிவிட பிரதிநிதி திரு முத்து இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழு விஜயம் செய்தது. இப்பாடசாலையில் 320 மாணவர்கள் கல்விகற்கின்றனர். இப்பாடசாலை மிகவும் பின்னடைவான கல்விபற்றிய அடிப்படைகள் குறைந்த சமூகத்தை பிரதிபலிக்கும் சூழலில் இருக்கின்றது. மாணவர் வரவு மிக குறைவு. இத்தகைய சவால்களைக்கொண்ட இப்பாடசாலை செயற் திட்டத்தில் உட்படுத்தப்பட்டு இப்பாடசாலைக்கு IMHO-USA மற்றும் Ratnam Foundation- UK ஆகியநிறுவனங்களால் வழங்கப்பட்ட Smart board கற்றல் தொகுதி உத்தியோகபூர்வமாக அன்று திறந்து வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது ஆசிரியர்களுக்கு முன்னரே வழங்கப்பட்ட பயிற்சியின்காரணமாக மாணவர்களுக்கு smart board ஊடாக கற்பித்து மாணவர்களும் smart board ஐ கையாளப்பழக்கப் பட்டிருந்தனர். இதனை ஆசிரியர்கள் கற்பித்தபோது மாணவர்களின் ஈடுபாட்டையும் உற்சாகத்தையும் பார்த்து விளங்கக்கூடியதாக இருந்தது.
Smart board மூலமாக மாணவர்கள் கற்றபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஒவ்வொரு மாணவனும் செயற்படுவதற்கு முண்டியடித்தனர். உற்சாகமாகவும் ஒரு ஆரோக்கியமான வகுப்பாகவும் இயங்கியது.