(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் )
(06-03-2024)
மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களை இன்றைய தினம் புதன்கிழமை (6) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பள்ளிமுனை புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (6) காலை 9.30 மணியளவில் பள்ளிமுனை மீன் சந்தை கட்டிடத் தொகுதி க்கு முன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.
குறித்த போராட்டத்தில் பள்ளிமுனை பங்குத்தந்தை,குறித்த கிராம மீனவர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகம் வரை அமைதியான முறையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இதன் போது பள்ளிமுனை கிராம மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தையும் தமக்கான இடங்களையும் தக்கவைப்பதில் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும் மன்னார் சௌத்பார் மீன்பிடி துறையில் மீனவர்கள் மீனவர்கள் வாழ்வாதாரம் மற்றும் மீன் பிடி எல்லை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் குறித்த மீனவர்கள் முந்தல் காணி எல்லை மற்றும் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் சிறு தொழில் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள கரையோர கடலட்டை பண்ணை போன்றவற்றை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என குறித்த கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த கிராம மக்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தீர்வை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.போராட்டத்தின் பின் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.