நடராசா லோகதயாளன்.
சைவர்களுக்கு மிகவும் புனித நாளாக கருதப்படும் சிவராத்திரி அன்று, தமது சமய கடமைகள் மற்றும் பூசைகளை செய்ய சென்ற, சிவ பக்தர்கள் மீது சிங்கள அரசின் காவல்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்திய சம்பவம் அரங்கேறியது.
வவுனியா மாவட்டம் வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோவிலடி சிவராத்திரி பூசையில் புகுந்த அரச படைகள், அராஜகமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, பூசைப் பொருள்களை காலால் தட்டி வீழ்த்தி இராணுவ வாகனத்தில்ல் அள்ளிச் சென்றதோடு மட்டுமின்றி அந்த ஆலயத்தின் பூசகர், உள்பட 8 பேரை இழுத்துச் சென்று வெள்ளிக்கிழமை (8) பின்னிரவு நேரம் கைது செய்தது.
இலங்கை பாதுகாப்பு படைகள், பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் என ஆயுதம் தாங்கிய படையினர் வெடுக்குநாரி காடு முழுவதும் குவிக்கப்பட்டு புத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க இறைவனின் வழிபாட்டிற்கென கொண்டுவரப்பட்ட அன்னதான சமையல், ஏனைய படையல் பொருட்கள், பூசைக்கு தேவையான பொருட்கள் என்று அனைத்தையும் அரச படைகள் காலால் உதைத்து சீரழித்தனர். எஞ்சியிருந்த தண்ணீர் கலனையும் பொலிஸார் கவிழ்த்து ஊற்றினர்.
இந்த மிலேச்சத்தனமான செயல் அங்கு கூடியிருந்த சிவ பக்தர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு கூட தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகள் மறுக்கப்படுவதாக அங்கு குழுமியிருந்த பக்தர்கள் இந்த செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
தமது அராஜக செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, மலை மீது அமர்ந்திருக்கும் சிவ பெருமானை வழிபடுவதற்கு வெளியிலிருந்து அங்கே செல்பவர்களை படையினரும் பொலிசாரும் தடுத்து நிறுத்தினர். இரவு நேரத்தில் பூசையின் போது தேவைப்படும் வெளிச்சத்திற்காக ஜெனரேட்டர்களை பயன்படுத்தவும் அரச தரப்பு அனுமதிக்கப்படவில்லை. வெளிச்சத்தை பெறுவதற்காக மாற்று ஏற்பாடாக ஆலய நிர்வாகத்தினரும் சிவனடியார்களும் பெட்ரோமேக்ஸ் விளக்கை தயார்படுத்த ஆயத்தங்களைச் செய்த போது அதனையும் பொலிஸார் பறித்துச் சென்றனர்.
கோயில் தீப வெளிச்சத்தில் பக்தர்கள் இருந்த சமயம் குழந்தைகளுக்கு குடிக்க குடிநீரை மலையுச்சிக்கு எடுத்துச் செல்ல சிங்கள அரச படைகளும் பொலிசாரும் அனுமதி மறுத்தனர். குடிநீரை கொண்டு செல்லவிருந்த பௌசர்களை மலையின் மீது எடுத்து செல்வது தடுக்கப்பட்டு அங்கு ஒரு மானுட அவலம் நிகழ்த்தப்பட்டது.
மிகவும் புனிதமான ஒரு தினத்தில் மலையேறி ஈசனை பூசித்து தரிசனம் செய்ய விழைந்த முதியர்வர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, தமக்கான குடிநீர் தேவையைக் கூட பூர்த்தி செய்துகொள்ள இயலாமன் தவித்தனர்.
மலைக்கு கீழே தடுப்பரண்களை அமைத்து எந்தளவிற்கு இடையூறுகளை ஏற்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு அதைச் செய்த படையினரும் பொலிசாரும், பின்னர் மலையின் மேலே வழிபாடு மற்றும் பூசையில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் நிர்வாக உறுப்பினர்கள என 8 பேரை இழுத்துச் சென்றனர்.
தமது மோசமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு மரபு ரீதியாக வேட்டி அணிந்து வந்த இரு பக்தர்களின் வேட்டியையும் பொலிசார் உருவி எறிந்த அவலமும் வெடுக்குநாறிமலையில் அரங்கேறியது.
சமய கடமைகளை செய்வதற்கு தமிழ் மக்கள் மிகவும் தாழ்மையாக வேண்டிய போதிலும், அது முற்றாக புறக்கணிக்கப்பட்டு, மத நிந்தனை செயல்பாடுகளில் பொலிசார் ஈடுபட்டனர். புண்ணிய தலமான வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் இறைவனுக்கு அருகில் பாதணிகள், சப்பாத்துக்களை அணிந்து இறை நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக பொலிசார் நடந்து கொண்டதை கானொளிகள் காட்டின.
சிவராத்திரி இரவு அண்று கைது செய்து இழுத்துச் செல்லப்பட்ட 8 பேரும் தற்போது நெடுங்கேணிப் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அது தொல்லியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட இடம் மற்றும் வனப்பகுதி, ஆகவே அங்கு வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாது என்று கூறியே அரச படைகளின் அராஜகம் அரங்கேறியது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
மலையின் மேலே தொலைபேசி இணைப்புகள் கிடைக்காத காரணத்தில் மேலே இடம்பெற்ற வன்செயல்கள், பூசைக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் ஆகியவற்றை உடனுக்குடன் கீழே இருப்பவர்களுடன் பகிர முடியாத நிலையும் காணப்பட்டது.
ஆதி சிவன் கோவிலில் வழிபடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோரும் முதலில் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் கடும் வாக்குவாதங்களின் பின்னரே மலையேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இறை நம்பிக்கையை அவமதித்தது, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகியவற்றை தட்டிக்கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை தூக்கிச் சென்ற பொலிசார் அவரை வாகனத்தின் முன்னாள் போட்டுச் சென்றனர்.
தேசத்தை கட்டியெழுப்புவோம் என்று ஒரு புறம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறைகூவல் விடுத்து வரும் நிலையில், அவரது அரசாங்கம் அதற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பது வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் நடந்தேறிய அவலங்கள் காட்டுகின்றன. ஒரு பௌத்த பிக்குவின் பேச்சிற்கு அடிபணிந்து ஆயிரக்கணககான சைவ பக்தர்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி, அவர்களின் மதச்சுதந்திரத்தை அரசு பறித்து அவமானப்படுத்தியது என்று அங்கு குழுமியிருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.