வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வலுக்கட்டாயமாகப் பொலிஸாரால் அகற்றப்பட்டுச் சிலரைக் கைது செய்த சம்பவம் சிங்கள – பெளத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழ்மக்கள் வாழ்கின்றார்கள் என்ற பேருண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்று தமிழ்மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் ஒரு கூற்றை வாசித்தேன். அதில் இலங்கையின் புராதன நாகரிகம் சம்பந்தமான வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு போவதே தமது சமய கலாசார அமைச்சின் பிரதான நோக்கமாக உள்ளது என்றும், வெடுக்குநாறிமலை, வனப்பிரதேச பரிபாலன பணிமனையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுடன் அது ஒரு தொல்பொருள் பகுதி என்றும் கூறியுள்ளார்.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் வெறும் தொல்பொருள் பாதுகாப்பு விடயமன்று. அரசாங்கத்துடன் தொடர்புடைய சிங்கள-பௌத்த நிறுவனங்கள் மற்றும் பௌத்த பிக்குகள் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தும் நீண்டகாலத் தந்திரத்திட்டத்தின் வெளிப்பாடே இது – என்றுள்ளது.